
இதுதொடர்பாக அமைச்சர் பி.மூர்த்தி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எனது மூத்த மகன் தியானேஷ்க்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், அதைப் பதிவு செய்துவிட்டதாக ஓராண்டாக தவறான தகவல் பரவி வந்தது. இதன் பின்னணி எதுவும் தெரியாததால் எங்களுக்கு குழப்பமாக இருந்தது. அதை ஒதுக்கி வைத்துவிட்டு என் மகனுக்கு தற்போது பெண் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அப்போதுதான் உறவினர்கள் சிலர், ‘உன் மகனுக்குத்தான் திருமணம் ஏற்கெனவே நடந்துவிட்டதே’ என நேரடியாக கேட்டனர். இதை ஆதாரப்பூர்வமாக எப்படி மறுப்பது என தவித்துக் கொண்டிருந்தேன்.
நிலக்கோட்டையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு என் உறவின ஒருவர் சென்றிருந்தார். அப்போது அந்த அலுவலகத்தில் வெளிச்சநத்தத்தைச் சேர்ந்த என் பெயர் கொண்ட பி.மூர்த்தி மகனுக்குப் பதிவு திருமணம் நடந்துள்ளதாக கூறியிருக்கிறார்கள். இதை என் உறவினர் என்னிடம் தெரிவித்தார். இதுபற்றி விசாரித்தபோதுதான். வெளிச்சநத்தத்தைச் சேர்ந்தவர் பாண்டியின் மகன் மூர்த்தி என்பதும் அவருடைய மகன் விஜி என்பவருக்கும் கோவையைச் சேர்ந்த பிரதீபாவுக்கும் நிலக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுத் திருமணம் நடந்தது தெரிந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தினர்.
இதுகுறித்து விஜியின் தந்தையிடம் விசாரித்தபோது அதற்கான ஆவணங்களையும் காண்பித்தார். வெளிச்சநத்தம் பி.மூர்த்தி என்றாலே பலருக்கும் என் நினைவுதான் வரும். திருமணம் முடித்தவரின் தந்தையின் பெயரும் பி.மூர்த்தி. பி.மூர்த்தி என்ற பெயரில் இன்னொருவர் எங்கள் கிராமத்தில் இருப்பதே இப்போதுதான் எனக்குத் தெரிந்துள்ளது. பெயர் குழப்பத்தின் காரணமாக என் மகன் திருமணம் குறித்த தகவல் தவறாகப் பரப்பப்பட்டிருக்கலாம். தற்போது உண்மையை வெளிப்படுத்த ஆதாரம் கிடைத்துள்ளது. இனிமேல் தவறான தகவலைப் பொதுமக்களும், உறவினர்களும் நம்பத் தேவையில்லை” என்று பி.மூர்த்தி தெரிவித்தார்.