பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம்.. அமைச்சர் அடித்த அதிரடி சிக்ஸர்..

By Ezhilarasan BabuFirst Published Sep 7, 2021, 1:13 PM IST
Highlights

பத்திரிக்கை துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், புகைப்படக்காரர் மற்றும் பிழைத்திருத்துபவர், பணிக்காலத்தில் இயற்கை எய்திட நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தற்போது குடும்ப உதவி நிதியாக அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கு ஏற்ப ரூபாய் 3 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

பத்திரிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது பத்திரிகையாளர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்துள்ள நிலையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பத்திரிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் வரிசையாக துறைவாரியாக விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என கூறினார். 

தொடர்ந்து அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் முதல் முறையாக பத்திரிக்கையாளர்களை முன்கள பணியாளர்களாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து பெருமை சேர்த்துள்ளார்கள். அதனடிப்படையில் உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து, செவ்வனே செயல்படுத்தி, அதோடு நலவாரிய உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்றார். மேலும் பத்திரிக்கை துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், புகைப்படக்காரர் மற்றும் பிழைத்திருத்துபவர், பணிக்காலத்தில் இயற்கை எய்திட நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தற்போது குடும்ப உதவி நிதியாக அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கு ஏற்ப ரூபாய் 3 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த குடும்ப உதவி ரூபாய் 3 லட்சம் ரூபாயை ஐந்து லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

மேலும் இளம் பத்திரிக்கையாளர்கள் ஊடகத் துறையில் சிறந்து விளங்கவும், அதன் நுணுக்கங்களை முழுமையாக அறிந்து கொள்ளவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆர்வமுள்ள தகுதி வாய்ந்த இளம் பத்திரிக்கையாளர்களை தெரிவுசெய்து, இந்திய அளவில் புகழ் மிக்க இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்யூனிகேஷன் JNU போன்ற கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயிற்சி பெறவும் நிதி உதவி வழங்கப்படும். பத்திரிகையாளர்கள் தங்களின் துறை சார்ந்த தொழில் தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்கு திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும், மொழித்திறன் மற்றும் நவீன தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கவும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பத்திரிக்கையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என அறிவிப்புச் செய்தார்.

 

click me!