கல்யாண மண்டப சொத்து வரி..! விஜயகாந்த் செய்த அதே தவறை செய்த ரஜினிகாந்த்..!

By Selva KathirFirst Published Oct 15, 2020, 10:14 AM IST
Highlights

சென்னை ராகவேந்திரா திருமண மண்டப சொத்து வரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் இமேஜ் அவரது ரசிகர்கள் மத்தியிலேயே கீழே இறங்கிவிட்டது என்று கூறினால் அது மிகையல்ல.

சென்னை ராகவேந்திரா திருமண மண்டப சொத்து வரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் இமேஜ் அவரது ரசிகர்கள் மத்தியிலேயே கீழே இறங்கிவிட்டது என்று கூறினால் அது மிகையல்ல.

சென்னை மாநகராட்சியை பொறுத்த வரை ஆறுமாதங்களுக்கு ஒரு முறை சொத்து வரி செலுத்த வேண்டும். வணிக நிறுவனங்கள் என்றால் ஆறு மாதங்களில் கிடைத்த வருவாயின் அடிப்படையில் வரி நிர்ணயிக்கப்படும். வருவாய் எதுவும் இல்லை என்றாலும் சொத்தின் மதிப்பிற்கு ஏற்ற வகையில் வரி வசூலிப்பதை மாநகராட்சி வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் 2020ம் வருடத்திற்கான முதல் ஆறு மாதங்களுக்கான சொத்து வரியை தற்போது மாநகராட்சி வசூலித்து வருகிறது.

அதன்படி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரஜினியின் ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சுமார் ஆறரை லட்சம் ரூபாய் சொத்து வரி விதிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக திருமண மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. இதனால் மண்டபத்திற்கு வருமானமும் இல்லை. எனவே தங்களுக்கு சொத்து வரி செலுத்துவதில் இருந்து விலக்கு தர வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மண்டப நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.

 

ஆனால் அந்த கடிதத்திற்கு மாநகராட்சி சார்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ஆறரை லட்சம் ரூபாயை மண்டப நிர்வாகம் மாநகராட்சியிடம் செலுத்தவும் இல்லை. இதனால் சொத்து வரி தாமதத்திற்கு என்று தாமத கட்டணத்துடன் அபராதமும் விதிக்க வாய்ப்பு உருவானது. எனவே தான் முன்னெச்சரிக்கையாக நடிகர் ரஜினிகாந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தை அவரது வழக்கறிஞர்கள் நாடினர். அதாவது ஆறு மாதங்களாக வருமானமே இல்லாத மண்டபத்திற்கு ஆறரை லட்சம் ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், மேற்கொண்டு இந்த விவகாரத்தில் தங்களுக்கு அபராதம் விதிக்கவும் தடை கொடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சொத்து வரி நோட்டீஸ் அளித்து பத்து நாட்களுக்குள் உயர்நீதிமன்றம் வந்தது ஏன் என்று அதிரடியாக ரஜினி தரப்புக்கு கேள்வி எழுப்பினார். மேலும் இந்த விவகாரத்தை மாநகராட்சியை அணுகி தீர்க்காமல் நீதிமன்ற நேரத்தை வீணடித்துவிட்டதாகவும் அனிதா சுமந்த் கண்டனம் தெரிவித்தார். மேலும்  இதற்காக ரஜினிக்கு அபராதம் விதிக்கப்போவதாகவும் அவர் எச்சரித்தார். இதனால் அரண்டு போன ரஜினி தரப்புஅந்த மனுவையே வாபஸ் பெற்றுக் கொள்வதாக கூறி பல்டி அடித்தது.

இதன் மூலம் நடிகர் ரஜினி எவ்வளவு பலவீனமான வழக்கறிஞர் டீமை வைத்துள்ளார் என்பது தெரியவருகிறது. மேலும் வெறும் ஆறரை லட்சம் ரூபாய்க்காக சென்னை உயர்நீதிமன்றத்தை ரஜினிகாந்த் போன்றோர் நாடியது வெளியே தெரிந்தால் எவ்வளவு தர்மசங்கடம் ஆகும் என்பதும் அவரிடம் எடுத்து கூறப்படவில்லை. இதன் மூலம் ரஜினிக்கு ஆலோசனை வழங்க சரியான நபர்கள் உடன் இல்லை என்பதும் தெரியவருகிறது. ரஜினி வரி விலக்கு என்று ஒரு குடிமகனாக தனது உரிமையையே நீதிமன்றம் சென்று கேட்டுள்ளார். ஆனால் கோடி கோடியாக சம்பளம் வாங்கும் ரஜினி ஒரு ஆறரை லட்சத்தை செலுத்தினால் குறைந்தா போய்விடுவார் என்பது தான்அவரது ரசிகர்கள் சிலரின் ஆதங்கமாக கூட உள்ளது.

இதே போலத்தான் விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு மோசமான வழக்கறிஞர் டீம், சரியான ஆலோசனை வழங்க ஆட்கள் இல்லாதது என்று அவர் பின்னடைவை சந்தித்தார். அதே போல் ரஜினி அரசியலுக்கு வராத நிலையிலேயே வெறும் ஆறரை லட்சம் ரூபாய்க்காக தெருவுக்கு வந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இது கிட்டத்தட்ட விஜயகாந்த் 2011க்கு பிறகு சந்தித்த அவமதிப்புகளை போன்றது. அதெற்கெல்லாம் காரணமாக இருந்தது விஜயகாந்துடன் சரியான நபர்கள் இல்லாதது தான். தற்போதும் ரஜினி இந்த விஷயத்தில் அந்த ஆறரை லட்சம் ரூபாயை செலுத்திவிட்டு பிறகு கூட அதனை திருப்பி கேட்டு மனு தாக்கல் செய்திருக்கலாம்.

ஆனால் அதனை ரஜினி செய்யவில்லை. வரிப்பணத்தின் மூலமாக தான் அரசுகள் மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. எனவே அப்படிப்பட்ட வரியையே செலுத்த விலக்கு கேட்டு ரஜினி மனு தாக்கல் செய்துவிட்டு சிஸ்டம் சரியில்லை என்றால் எப்படி? என்று கேள்வி எழுந்துள்ளது.

click me!