ரஜினிக்கு நான் எதிரி... சில மாதங்களுக்கு முன்பே ரஜினி முன்னிலையில் பேசிய பாரதிராஜா!

By Asianet TamilFirst Published Feb 3, 2020, 10:53 PM IST
Highlights

“நான் அவ்வப்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை மனதளவில் காயப்படுத்தியுள்ளேன். ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாத அருமையான மனிதர். அவர் ஒரு பெரிய ஆன்மா. தராசு போட்டு மக்களை பிடித்தவர் அவர். எந்த விஷயத்தையும் சரியான கலவையில் கொடுத்தவர்.” 
 

தமிழகத்தை நடிகர் ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
 நடிகர் ரஜினிகாந்த அரசியலில் இறங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆண்டு மத்தியில் ரஜினி அரசியல் கட்சியைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுவார். பின்னர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஜினியை விமர்சித்து இயக்குநர் பேட்டி அளித்துள்ளார். 
இதுதொடர்பாக செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் பாரதிராஜா, “அஸ்ஸாமை ஒரு அஸ்ஸாமியர் ஆள்கிறார். மராட்டியத்தை மராட்டியர் ஆள்கிறார். கர்நாடகாவை கன்னடக்காரர் ஆள்கிறார். கேரளாவை ஒரு மலையாளி ஆள்கிறார். அதுபோலவே தமிழகத்தை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும். தமிழகத்தை ரஜினி ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆங்கிலேயர் ஆள்வதை எப்படி ஏற்கமுடியாதோ அது போவே தமிழகத்தை ரஜினி ஆள்வதை ஏற்க முடியாது. நான் தமிழன்தான் என ரஜினிகாந்த் பேசினாலும், இங்கே அவர் வாழ வந்தவர்தான்” என்று பாரதிராஜா தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு கதாசிரியர் கலைஞானத்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினி முன்னிலையில் பேசிய பாரதிராஜா, “நான் அவ்வப்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை மனதளவில் காயப்படுத்தியுள்ளேன். ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாத அருமையான மனிதர். அவர் ஒரு பெரிய ஆன்மா. தராசு போட்டு மக்களை பிடித்தவர் அவர். எந்த விஷயத்தையும் சரியான கலவையில் கொடுத்தவர். 
நான் எல்லோருக்கும் விழா எடுத்துவிட்டேன். நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் உங்களுக்கு விழா எடுத்துவிடுகிறேன் என்று ரஜினியிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். ஏனென்றால் நீங்கள் அரசியலுக்கு வந்துவிட்டால் நாம் இருவரும் எதிரெதிர் முனையாகிவிடுவோம். அதனால் என் நண்பா, என் நட்பிற்கு உரியவரே, மதுரை மண்ணில் உனக்கு பெரிய விழா எடுக்க எனக்கு ஆசை என்றேன். ஆனால் அவரோ முடியவே முடியாது என்று வேண்டாம் என்கிறார். இருந்தாலும் நான் விடாமல் அவரை கேட்டுக்கொண்டே இருப்பேன்'' என்றார்.

click me!