‘போட்டோ ஷூட் நடத்தும் முதல்வரை வீட்டுக்கு அனுப்புவோம்…’ எம்.ஜி.ஆர் சமாதியில் இபிஎஸ் சபதம்

Published : Dec 24, 2025, 01:17 PM IST
EPS

சுருக்கம்

நெருங்குகிறது 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல். பெருகுகிறது நமக்கு மக்கள் ஆதரவு. பெருகுகிறது பெருகுகிறது புரட்சித்தலைவர், புரட்சித் தலைவியின் ஆசிகள் நமக்கு இருக்கிறது.

எம்.ஜி.ஆரின் 38-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். எடப்பாடி பழனிசாமி வாசித்த உறுதிமொழிகளை வாசிக்க, தொண்டர்கள் திருப்பிச் சொன்னார்கள்.

‘‘அதிமுக நிறுவனத் தலைவர் ஏழை எளிய மக்களின் உயர்வுக்காகவும், தாய்மார்களின் முன்னேற்றத்துக்காகவும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும் பொற்கால ஆட்சி தந்தவர் பொன்மனச் செம்மல். சத்துணவு தந்த சரித்திர நாயகர். மகத்தான மக்கள் ஆட்சி தந்த மானுடப் பற்றாளர் புரட்சித் தலைவர் உருவாக்கிய மகத்தான மக்கள் இயக்கமாம் அதிமுகவை நம் உரியினும் மேலாக கருதி எந்நாளும் காப்போம் என உளமாற உறுதி ஏற்கிறோம்.

தன் கலைப் பயணத்தாலும் அரசியல் பணிகளாலும், ஆட்சி சிறப்புகளாலும் தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களின் உரிமைகளையும் தாய்க்குலத்தின் பெருமைகளையும், சமத்துவ கொள்கைகளையும் உயர்வாக எண்ணி மதித்தவர் மகிழ்ச்சியாய் மக்கள் வாழ்ந்திட மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்தவர் தமிழக மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நீக்கமற நிறைந்தவர் அத்தகைய வீரமும், ஈரமும், தீரமும் மிக்க மக்கள்திலகம் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பெரும்புகழை காத்திடும் வண்ணம் கழகப் பணிகளை ஆற்றிடுவோம் என்று உளமாற உறுதியேற்கிறோம்.

எம்ஜிஆர் தமிழ் மண்ணை தாயாகவும், தமிழ் மொழியை உயிராகவும் நினைத்து மக்கள் போற்றும் வண்ணம் மகத்தான மக்கள் ஆட்சி தந்தவர். தமிழக மக்களின் உள்ளங்களில் நிறைந்திருப்பவர். பசிப்பணி தீர்த்துவைத்த பாரி வள்ளல். பார் புகழ நாடாண்ட இதய தெய்வம். அந்த மாபெரும் மனித நேயமிக்க மானுடப் பற்றாளரின் நினைவுகளை நெஞ்சிலே தாங்கி அவர் வழி நடப்போம் என உளமாற உறுதி ஏற்கிறோம்.

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை ஒழித்திடவும், ஜனநாயகத்தை காத்திடவும் புதிய எழுச்சியை தந்தவர் நம் தலைவர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள். புரட்சித் தலைவர் மக்கள் துணையோடு உருவாக்கிய உண்மையான ஜனநாயகத்தை எந்நாளும் காப்போம் என உளமாற உறுதியேற்கிறோம்.

தமிழக மக்களின் வளர்ச்சிக்காக வசனத்தில், நடிப்பில் புரட்சி, அரசியலிலும் புரட்சியின் வடிவமாக திகழ்நத புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் காட்டிய புரட்சி வழியை நாமும் பின்பற்றுவோம். மக்களுக்காக தொண்டாற்றுவோம் என உளமாற உறுதியேற்கிறோம்.

ஏழை எளியவர் நலனுக்காக ஏற்றமிகு திட்டங்கள். சமுதாயத்தில் பின் தங்கியிருக்கும் மக்களுக்காக திட்டங்கள். பெண்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்காக திட்டங்கள் உழைக்கும் தொழிலாளர்களுக்காக உன்னத திட்டங்கள். நெசவாளர்களுக்கான திட்டங்கள். விவசாயிகளுக்காக பல திட்டங்கள் மீனவ பெருமக்களுக்காக திட்டங்கள் மாணாக்கர்களுக்கான திட்டங்கள் என்று எண்ணற்ற திட்டங்களை வகுத்துத் தந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் முத்தான திட்டங்கள் தொடர்ந்திட மீண்டும் கழக ஆட்சி மலர வேண்டும். அதற்காக அயராது உழைப்போம் என உளமாற உறுதியேற்கிறோம்.

பொய்யான வாக்குறுதிகள் பல தந்து ஆட்சிக்கு வந்திட்ட விடியா திமுக ஆட்சியிலே நீட்டுக்கு விலக்கில்லை. கல்விக்கடன் ரத்து இல்லை. சிலிண்டருக்கு மானியம் இல்லை. பெட்ரோல் டீசல் விலை குறைப்பு இல்லை. தமிழக மக்களின் கேள்விகளுக்கு பொம்மை முதல்வர் ஸ்டாலினிடம் பதில் இல்லை. போட்டோ ஷூட் நடத்தும் பொம்மை முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்புவோம். கழக ஆட்சியை அமைத்து கோட்டையிலே கொடியேற்றுவோம்.

கொடிபிடிக்கும் தொண்டனையும் கொள்கை பிடிப்புள்ள தொண்டனையும் புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களையும், புரட்சித்தலைவி அம்மாவின் விசுவாசமிக்க தொண்டர்களையும், துரோகத்தால் வீழ்த்திவிட முடியாது. எதிரிகளும் துரோகிகளும் தீட்டும் திட்டங்கள் பலிக்காது.

கழகத்தின் வெற்றி என்பது நமது ஒரே இலக்கு. 2026 சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் வெற்றி என்பதே நமக்கு இலக்கு என்று உளமாற உறுதியேற்கிறோம். தமிழகத்தில் 3 முறை ஆட்சியை பிடித்த முடிசூடா மன்னராக திகழ்ந்திட்ட நம் தலைவர் புரட்சித் தலைவர் வழியில் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தன் வாழ்வை அர்ப்பணித்த தாயுள்ளம் கொண்ட தருமமிகு தலைவி 6 முறை தமிழ்நாட்டு முதல்வராக பதவிவகித்த, அசைக்கமுடியாத மக்கள் சக்தியை பெற்ற புரட்சித்தலைவி வழியில் பயணித்து இருபெரும் தலைவர்களின் பெரும்புகழை காப்போம்.

வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தல் களத்தில் வெற்றி எனும் புகழ் மகுடத்தை சூட்டுவோம் என்றுவீரமிக்க தொண்டர் படை, விசுவாசமிக்க தொண்டர் படை ஆர்ப்பரிக்க ஆர்பரிக்க உளமாற உறுதியேற்கிறோம். நெருங்குகிறது 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல். பெருகுகிறது நமக்கு மக்கள் ஆதரவு. பெருகுகிறது பெருகுகிறது புரட்சித்தலைவர், புரட்சித் தலைவியின் ஆசிகள் நமக்கு இருக்கிறது. 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர் படை இரட்டை இலையை தாங்கும் வீரம் நிறைந்த தொண்டர் படை துணையோடு இரவு பகல் பாராமல் சுற்றிச் சுழன்று பணியாற்றி சட்டமன்றத் தேர்தல் களத்தில் வென்றுகாட்டுவோம் என்று உறுதி ஏற்கிறோம். இந்த உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைவரும் எம்ஜிஆருக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்த மூன்று நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொல்ல துடிக்கும் அமெரிக்கா..? டிரம்பின் சதித் திட்டம்..!
அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?