திமுகவுக்கு மக்கள் ஆதரவு அமோகம்... 200 தொகுதிகளை அடைந்தே தீருவோம்... மு.க.ஸ்டாலின் புத்தாண்டு மெசேஜ் ..!

By Asianet TamilFirst Published Jan 1, 2021, 9:20 PM IST
Highlights

புத்தாண்டில் புது விடியல் நிச்சயம். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்கிற இலக்கை அடைந்தே தீருவோம் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கட்சித் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழகத்தை அலைக்கழித்த பத்தாண்டுகால அலங்கோல ஆட்சியின் தடித்த இருட்டை எப்படியாவது பாதுகாத்து, மேலும் எடுத்துச் செல்ல வேண்டும் என பல பிற்போக்கு சக்திகள் இறங்கியுள்ளன. மக்களின் நலன் காக்கும் சின்ன ஒளிக்கீற்று தென்பட்டாலும், அதனை ஊதி அணைப்பதற்கு, அதிகாரத்தின் அத்தனை வாய்களும் சூழ்ச்சி வியூகம் வகுத்துக் காத்திருக்கின்றன. இவற்றுக்கு நடுவேதான், ஒளியேற்றும் பணியை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.


நாளுக்கு நாள் திமுகவுக்குப் பொங்கிப் பெருகி வரும் ஆதரவு, நாடாளுமன்றத் தேர்தல் களம் போலவே, சட்டப்பேரவைத் தேர்தல் களத்திலும் பெருவெற்றியைத் தரும் என்பதை, உளவுத்துறையினர் அளித்துள்ள அறிக்கைகள் வாயிலாகவும் - மக்களின் வெறுப்பு மற்றும் எதிர்ப்பலைகள் வாயிலாகவும் அதிமுக ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள். கொள்ளையடித்தவற்றை மூட்டை கட்டிக்கொண்டு, கோட்டையைக் காலி செய்து, கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது தெரிந்துவிட்டதால், புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு, திமுகவுக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.
புளுகு மூட்டையிலேயே மிகப்பெரிய புளுகு மூட்டையை வைத்திருப்பவர் முதலமைச்சர் பதவிக்குத் தத்தித் தவழ்ந்து வந்திருக்கும் எடப்பாடி பழனிசாமிதான். போராடும் விவசாயிகளை இடைத்தரகர்கள் எனக் கொச்சைப்படுத்திய ‘போலி விவசாயி’ யும், அரசியல் இடைத்தரகருமான அடிமை ஆட்சியின் முதலமைச்சர், என் மீது குற்றம் சுமத்தி, பொய்க்கு மேல் பொய்யாக அவிழ்த்து விடுகிறார். அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்குக் கிடைத்துள்ள முதலீடு எவ்வளவு, தொடங்கப்பட்ட நிறுவனங்கள் எத்தனை, வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்கள் எத்தனை பேர், கொரோனா காலத்தில் வாங்கிய மருத்துவக் கருவிகளுக்கான கணக்கு என்ன? இவை எல்லாவற்றுக்கும் விரிவான வெள்ளை அறிக்கையினை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா எனக் கேட்டால், பதிலளிக்கும் திறனின்றி, என் மீதும் கழகத்தின் மீதும் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசுவதா?
திமுக ஆட்சியின் மறக்க முடியாத மகத்தான சாதனைகள் எதனையும் அறியாத மண்புழுவாகக் காலம் கழித்த எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரம் தொடங்கி, கள நிலவரமோ வரலாறோ எதையும் அறியாமல், அனைத்திலும் காழ்ப்புணர்வினால், மலிவான - தரம்தாழ்ந்த பொய்களைக் கடை பரப்புகிறார். அவரது அரசியல் வியாபாரக் கடையில் நின்றுகொண்டு, திமுக குடும்பக் கட்சி என்று கூவுகிறார் - கூச்சலிடுகிறார். உடன்பிறப்புகள் அனைவரும் ஒரே குடும்பம் என்கிற உயர்ந்த பாசம் கொண்ட கட்சிதான் திமுகழகம் என்பது மக்களுக்குத் தெரியும். அதே நேரத்தில், தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி - ஊழல் செய்து -கொள்ளையடிக்கும் எடப்பாடி பழனிசாமி எப்படிப்பட்டவர் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். திமுகவை கார்ப்பரேட் கட்சி என்கிறார் பழனிசாமி. கார்ப்பரேட்டுகளுக்காகவே செயல்படும் மத்திய பாஜக அரசின் கொத்தடிமையாக இருந்துகொண்டு, திமுகவை நோக்கிப் பொய்களை அள்ளிவீசும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் சிறிதும் மதிப்பதில்லை.
மக்கள் மட்டுமா? அவரது கட்சியைச் சார்ந்தவர்களே மதிப்பதில்லை. அவர்தான் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்வதற்கு, அவரது ஆட்சியின் துணை முதலமைச்சருக்கு மனதும் வார்த்தைகளும் வர மறுக்கிறது. தேசிய கட்சிதான் முதலமைச்சர் வேட்பாளரை முடிவு செய்யும் என்கிறார் இன்னொரு அமைச்சர். ஆளுக்கொரு திசையில் அவரவர் கண்கண்ட எஜமானர்களின் உத்தரவுக்கேற்ப ஒவ்வொரு நாளும் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். எதைப் பேசினாலும் எடப்பாடி பழனிசாமியிலிருந்து அத்தனை அமைச்சர்களும் திமுக மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சொல்வது என்பது, தங்களின் சாதனையாகச் சொல்வதற்கு எதுவுமில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
அதிமுகவின் பொய் ‘வெல்லமூட்டை’ வியாபாரம் மக்களிடம் போணி ஆகாது. ‘கடைவிரித்தேன்.. கொள்வாரில்லை’ எனப் புளுகு மூட்டைகளை முதுகில் சுமந்தபடி, நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிற்பதற்குத்தான் எடப்பாடி பழனிசாமியும் அவரது அமைச்சரவை சகாக்களான கொள்ளைக் கூட்டமும் வேகமாகத் தயாராக வேண்டும். அதற்கான செயல்திட்டத்தில் திமுகவைவிடத் தமிழக மக்கள் தீவிரமாக இருக்கிறார்கள். தீர்ப்பு நாள் எப்போது என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். 
‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தீர்மானத்தை ஒருமனதாக உறுதியான குரலில் மக்கள் நிறைவேற்றி வருகிறார்கள். இணையதளத்தின் வாயிலாக 51,30,556 பேரும், மக்கள் சபைகளின் வாயிலாகத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுப் பல லட்சம் பேரும் இதுவரை அதிமுகவை நிராகரித்துள்ளனர். இது தொடர்கிறது. பரவுகிறது என்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான், கிராமசபைக் கூட்டங்களை திமுக நடத்தக் கூடாது என்று தொடை நடுங்கி எடப்பாடி பழனிசாமி அரசு, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி வாயிலாக உத்தரவிடுகிறது. அதிகார மிரட்டலுக்கு அஞ்சி நடுங்கிட நாம் என்ன அடிமை ஆட்சியாளர்களா? 
ஊழலில் முதலிடம், கொள்ளையில் முதலிடம், கஜானாவை காலி செய்வதில் முதலிடம் என எல்லாவகையிலும் மக்களை வஞ்சிப்பதில் முதலிடம் பிடித்துள்ள அதிமுக ஆட்சியில், ஊழல் அமைச்சர்களில் யாருக்கு முதலிடம் என்பதில் அத்தனை பேருமே முதலமைச்சருடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்திடவும், மக்கள் விரோதிகளான இந்த அமைச்சர்களை தேர்தல் களத்தில் மக்களே தண்டித்துப் படுதோல்வி அடையச் செய்யும் வகையிலும் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் எழுச்சியுடன் தொடர்கின்றன.
இருண்ட தமிழகத்திற்கு மீண்டும் வெளிச்சம் கொண்டுவர திமுகழகத்தால் முடியும் என்பதை மக்கள் உறுதியுடன் நம்புகிறார்கள். வெளிச்ச விளக்குகளை ஊதி அணைத்துவிடலாம் என அதிகாரத்தில் இருப்பவர்கள் கைகோர்த்துச் செயல்படுகிறார்கள். அது அவர்களால் முடியவே முடியாது. ஏனென்றால், உதயசூரியன் என்ற உலகின் ஒளிவிளக்கை எவராலும் ஊதி அணைத்துவிட முடியாது. புத்தாண்டில் புது விடியல் நிச்சயம். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்கிற இலக்கை நாம் அடைந்தே தீருவோம்! நமது உழைப்பால், ஒற்றுமையால், தோழமைக் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பால், இந்தப் புத்தாண்டு உதயசூரியன் ஆண்டாக மலர்ந்திடு‘மே’!” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

click me!