என் தாத்தா மிச்சம் மீதி வைத்து விட்டுப்போன இந்துத்துவா சக்திகளை வேரோடு அழிப்போம்... உதயநிதி சூளுரை..!

By Thiraviaraj RMFirst Published Oct 2, 2019, 5:37 PM IST
Highlights


இந்துத்துவச் சக்திகளை வேரோடு அழிக்க களமிறங்குவோம், அதற்கு உறுதியேற்போம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
 

அர.திரவிடம் எழுதிய ’திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை’நூல்  வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ’’நம் தி.மு.க. அலுவலகமாக இருந்த அன்பகத்தைவிட இடவசதி அதிகமாக உள்ள அலுவலகத்துக்குப் போக வேண்டும் என்று கலைஞர் அப்போது அறிவாலயத்தை உருவாக்குகிறார். அப்போது எந்த அணிக்கு அன்பகத்தைத் தருவது என்ற குழப்பம். எந்த அணி அதிகளவு கட்சி வளர்ச்சி நிதியைத் தருகிறதோ அந்த அணிக்குத்தான் அன்பகம் என்று போட்டி வைக்கிறார். நம் இப்போதைய தலைவர் கிராமம் கிராமமாகச் சென்று இளைஞரணி நிகழ்ச்சிகள் நடத்தி நிதி வசூலித்து லட்சக்கணக்கில் நிதியை அளிக்கிறார். அந்த அன்பகத்தில்தான் இப்போது நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது எனக்குப் பெருமை.

நம்முடைய தலைவர் மிசாவில் அனுபவித்த துயரங்கள் உங்களுக்குத் தெரியும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றி தேடித் தந்து இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் நம் தலைவர். 'உழைப்பு.... உழைப்பு.... உழைப்பு.... அதுதான் ஸ்டாலின்' என்று கலைஞரால் பாராட்டப்பட்டவர் நம் தலைவர்.

மூவாயிரம் ஆண்டுகால ஆரிய - திராவிடப் போரில் சுழன்ற வாள், நடேசனார், நாயர், தியாகராயர், பெரியார், அண்ணா, கலைஞர் கைகளில் சுழன்று இப்போது நம் தலைவரின் கைகளில் வந்திருக்கிறது. இந்துத்துவச் சக்திகளை வேரோடு அழிக்க களமிறங்குவோம், அதற்கு உறுதியேற்போம்.

நீதிக்கட்சி சிந்தித்ததைப் பெரியார் செய்து முடித்தார். ஈரோட்டுச் சிங்கம் பெரியார் சிந்தித்ததை அண்ணா செய்து முடித்தார். காஞ்சித் தலைவன் அண்ணா நினைத்ததை முத்தமிழறிஞர் கலைஞர் செய்து முடித்தார். கலைஞர் நினைத்ததை அவருடைய தளபதி  நம்முடைய தலைவர் செய்து முடிப்பார். நம்முடைய தலைவர் நினைப்பதை இளைஞரணிச் செயல்வீரர்கள் நாம் முடிப்போம் என்று சூளுரைத்து விடைபெறுகிறேன்’’ என அவர் சூளுரைத்தார்.

click me!