மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்ப்போம்... அழைப்பு விடும் மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published May 11, 2021, 6:22 PM IST
Highlights

இந்திய ஒன்றியம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் கடுமையாக இருப்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். இந்தப் பேரிடரிலிருந்து மக்களைப் பாதுகாப்பதே அரசின் முதன்மையான பணியாகும்.
 

கொரோனா பேரிடரிலிருந்து தமிழகத்தை மீட்பதற்கு ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி - தோழமைக் கட்சி என்பதைக் கடந்து மக்களின் பிரதிநிதிகளாகச் செயலாற்றுவோம் என பொறுப்பேற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய ஒன்றியம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் கடுமையாக இருப்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். இந்தப் பேரிடரிலிருந்து மக்களைப் பாதுகாப்பதே அரசின் முதன்மையான பணியாகும்.

தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதுடன், இந்தத் தடைக்காலத்தில் பொருளாதார நெருக்கடியை அவர்கள் சமாளிக்கும் வகையில் குடும்ப அட்டைக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன், படுக்கை வசதி, மருந்துகள் ஆகியவை தடையின்றி கிடைப்பதற்கான முயற்சிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலைமையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கும் எனது தலைமையிலான அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது.

பதினாறாவது சட்டமன்றப் பேரவையில் உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ளவர்கள் தேர்தல் களத்தில் வெவ்வேறு கூட்டணிகளில், வெவ்வேறு கட்சி சார்ந்தவர்களாகக் களம் கண்டு வெற்றி பெற்றிருந்தாலும், மக்கள் நலன் காப்பதில் ஒருமித்த சிந்தனையுடன் கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது. எனவே, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிக்குச் சென்று, பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்குத் துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் தொகுதிகளில், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏதேனும் தொய்வு தெரிந்தாலோ, படுக்கை வசதி - ஆக்சிஜன் - மருந்து தேவை ஆகியவற்றில் நெருக்கடி இருந்தாலோ இந்த அரசின் கவனத்திற்கு விரைந்து கொண்டு வரக் கோருகிறேன். எனது தலைமையிலான அரசு உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டு மக்களைப் பாதுகாப்பதில் உறுதியான செயல்பாட்டை மேற்கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன்.

கொரோனா பேரிடரிலிருந்து தமிழகத்தை மீட்பதற்கு ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி - தோழமைக் கட்சி என்பதைக் கடந்து மக்களின் பிரதிநிதிகளாகச் செயலாற்றுவோம். தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட நாம் அனைவரும் இணைந்து நிற்போம்." எனத் தெரிவித்துள்ளார்.
 

click me!