நாட்டின் நலன்கருதி சுயநல அரசியலை கை விட வேண்டும்..!! எதிர்கட்சிகளுக்கு மோடி எச்சரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 31, 2020, 11:54 AM IST
Highlights

எப்போதும் இந்தியா தனது இறையாண்மையையும், கவுரவத்தையும் பாதுகாக்க முழுமையாக தயாராக உள்ளது என்றார். எதிர்க்கட்சிகளை வலியுறுத்திய அவர், நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி சுயநல அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அதேபோல் எதிர்க்கட்சிகள் நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் நாட்டின் நலன் கருதி அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 145 வது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமான இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. சர்தார் பட்டேலுக்கு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

பட்டேலின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ளார் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றடைந்த அவரை விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சாரியா தேவரத்  ஆகியோர் வரவேற்றனர். இன்று நர்மதை மாவட்டத்தில் கொவடியா என்ற கிராமத்திற்கு சென்ற மோடி அங்கு சுமார் 182 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் திருவுருவச் சிலையின் காலடியில் பாலூற்றி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனையடுத்து குஜராத் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒற்றுமை தின அணிவகுப்பு நடைபெற்றது, அதை பிரதமர் மோடி பார்வையிட்டார். 

அதைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர், உலக நாடுகள் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்றார். பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் யாருக்கும் பலனில்லை, இந்தியா எங்கேயும், எப்போதும் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடி வருகிறது எனக் கூறினார். மேலும் சுற்றுலா மற்றும் பயங்கரவாதம், புல்வாமா தாக்குதல் அந் நேரத்தில் நடந்த அரசியல் போன்ற பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசினார், மேலும் பாகிஸ்தான் மற்றும் சீனாவை தாக்கினார். அது குறித்து பேசிய அவர், நான் இன்று துணை ராணுவ படைகளின் அணிவகுப்பை பார்த்துக் கொண்டிருந்தபோதே மனதில் இன்னொரு காட்சி அசைவாடியது, அது புல்வாமா தாக்குதல், நமது துணிச்சல்மிக்க வீரர்கள்  நாட்டிற்காக தங்களையே தியாகம் செய்தபோது நாடே  உச்சக்கட்ட சோகத்தில் இருந்தது, ஆனால் சிலர் அந்த துயரத்தில்  பங்கெடுத்துக் கொள்ளவில்லை என்பதை நாடு ஒரு போதும் மறக்காது. மாறாக அந்த தாக்குதலை எப்படி அரசியலாக்கலாம் என்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர். அதை ஒருபோதும் மக்கள் மறக்க மாட்டார்கள். முழுக்க முழுக்க சுயநலத் அரசியல் செய்யப்பட்டது என்றார். 

மறைமுகமாக சீனா  பாகிஸ்தானை  எச்சரித்த அவர், இன்று இந்திய எல்லையில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திற்கு சாலைகள், டஜன் கணக்கான பாலங்கள், சுரங்கப் பாதைகளை இந்தியா அமைத்துள்ளது. நாட்டிற்குள் எப்படியாவது  ஊடுருவி விடலாம் என்று காத்திருப்பவர்களுக்கு பொருத்தமான பதிலடி கொடுக்கப்படுகிறது. எப்போதும் இந்தியா தனது இறையாண்மையையும், கவுரவத்தையும் பாதுகாக்க முழுமையாக தயாராக உள்ளது என்றார். எதிர்க்கட்சிகளை வலியுறுத்திய அவர், நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி சுயநல அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  உங்கள் சுயநலத்திற்காக நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்கின்ற அரசியல் தேச விரோதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும், அது நாட்டுக்கோ அல்லது உங்கள் கட்சிக்கோ எந்த வகையிலும் பயன் அளிக்காது என்று அவர், நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவதன் மூலமே அது நாட்டுக்கும் உங்களுக்கும் நன்மை பயக்கும் என கூறினார்.
எல்லோருடைய நலனிலும் கவனம் செலுத்துவதன் மூலமே நாம் முன்னேற முடியும் என்றார். 

இன்று உலகில் உள்ள அனைத்து நாடுகளும், அனைத்து அரசாங்கங்களும், அனைத்து மதங்களும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்ற பிரதமர் அமைதி, சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை போன்ற உணர்வே மனித குலத்தின் உண்மையான அடையாளமாகும். பயங்கரவாதமும் வன்முறையும் ஒருபோதும் யாருக்கும் பயனளிக்காது என்றார். குஜராத்தில் sea plane எனப்படும் கடல் விமான சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.  குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஒற்றுமை சிலையை காண கடல் விமான சேவை இன்று முதல் துவக்கப்படுகிறது, இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளார்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான இன்று நாட்டிலேயே முதல் முறையாக கடல் விமானம் இயக்கப்பட உள்ளது. இந்த கடல் விமான சேவையை ஸ்பைஸ் ஜெட் ஏர் லைன் ஏற்றுக்கொண்டுள்ளது. நபர் ஒருவருக்கு சுமார் 4200 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 19 பேர் வரை பயணம் செய்ய முடியும் என்ற போதிலும் 12 பேர் வரையில் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். முதற் கட்டமாக கடல்  விமானம் சேவை அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றிலிருந்து நர்மதா மாவட்டத்திலுள்ள கொவடியா காலனியில் உள்ள ஒற்றுமை சிலை வரை பயணிக்க உள்ளது. முன்னதாக  ஒற்றுமை சிலையை சுற்றி சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பில்  16 திட்டங்களை மோடி துவங்கி வைத்தார். இது சுற்றுலாத்துறையில் புதிய மைல் கல் என கூறப்படுகிறது. 
 

click me!