தமிழகத்தில் பாடம் புகட்டிட்டோம்.. அடுத்து தேசிய அளவில்... பாஜகவுக்கு எதிராக மு.க. ஸ்டாலின் முழக்கம்!

By Asianet TamilFirst Published Dec 28, 2021, 8:49 AM IST
Highlights

தமிழ் நாட்டில் அதிமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என அவர் சபதம் செய்தார். வெற்றி விழா கூட்டத்தில் சந்திப்போம் என தேர்தலுக்கு முன்பு முழங்கினார். ஆனால், இவ்வளவு பெரிய வெற்றியை அவர் பார்க்கவில்லையே என்ற சோகம் வாட்டி வதைக்கிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். இந்திய அளவில் யாருக்கு (பாஜக) பாடம் புகட்ட வேண்டுமோ அவர்களுக்கு புகட்டுவோம் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன் கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய படத் திறப்பு நிகழ்ச்சியும், புகழஞ்சலில் நிகழ்ச்சியும் சென்னையில் நடைபெற்றது. தா.பாண்டியனின் திருஉருவப் படத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு திறந்து வைத்தார்.  

இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதல்வருமான பங்கேற்று மு.க. ஸ்டாலின் பேசுகையில், “ தோழர் தா.பாண்டியன் என்றாலே தலை தாளாத பாண்டியன் என்றுதான் பொருள். அவர் எப்போதுமே யாருக்கும் அஞ்சாதவராக மட்டுமே இருந்தார். திமுகவுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே இருப்பது வெறும் நட்பு மட்டும் அல்ல. இது ஒரு குடும்பம். அதுவும் சாதாரண குடும்பம் அல்ல கொள்கை குடும்பம். திராவிட இயக்கமும் பொதுவுடமை இயக்கமும் எப்போதும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தா.பாண்டியன் கூறிக்கொண்டே இருப்பார். அதைத்தான் நாம் தற்போது பின்பற்றி வருகிறோம். நமக்குள் உள்ளது தேர்தல் உறவு அல்ல, கொள்கை உணர்வு.

மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் தா. பாண்டியன் பேசும்போதும் ஆட்சி மாற்றம் வேண்டும் எனப் பேசியிருந்தார். தற்போது அவர் இங்கு இல்லை என்பது நமக்கெல்லாம் கவலை அளிக்கிறது. தமிழ் நாட்டில் அதிமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என அவர் சபதம் செய்தார். வெற்றி விழா கூட்டத்தில் சந்திப்போம் என தேர்தலுக்கு முன்பு முழங்கினார். ஆனால், இவ்வளவு பெரிய வெற்றியை அவர் பார்க்கவில்லையே என்ற சோகம் வாட்டி வதைக்கிறது. பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் பாடம் புகட்ட கூடிய தேர்தலாக சட்டப்பேரவைத் தேர்தல் இருக்கும் என்று நான் கூறியிருந்தேன். பாடத்தை தமிழக மக்கள் புகட்டிவிட்டார்கள். ஆனாலும், இந்திய அளவில் யாருக்கு பாடம் புகட்ட வேண்டுமோ அவர்களுக்கு பாடத்தை புகட்ட வேண்டும். அதற்கு அனைவரும் உறுதியேற்க வேண்டும்” என மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி ராஜா, தமிழக செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

click me!