சொன்னதை செய்திருக்கிறோம்.. 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியாச்சு.. வீடியோ வெளியிட்டு அடுக்கிய முதல்வர் ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Sep 25, 2021, 8:38 AM IST
Highlights

திமுகவின் 505 தேர்தல் அறிக்கையில் 202 நிறைவேற்றப்பட்டுவிட்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பொய்யான வாக்குறுதிகளைக் கூறி திமுக ஏமாற்றி விட்டது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் திமுகவின் 5050 தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.  
அதில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மே 7 அன்று பதவியேற்ற சில மணி நேரத்திலேயே முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டேன். 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ. 4000, ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு, மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம், மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவினத்தை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் அரசே ஏற்பு என்று இந்த ஐந்தில் முதல் நான்குமே திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தவை.
வேளாண்மை உற்பத்தியை பெருக்கவும் ,விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் முதல் முறையாக வேளாண்மை துறைக்கு என்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தோம். கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ. 2750 கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு செய்துள்ளோம். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைத்தோம்.
ஊரகப் பகுதிகளில் ரூ. 1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவது, நமக்கு நாமே திட்டத்தில் உள்ளூர் சமூக மக்களுடன் இணைந்து ரூ.100 கோடி மதிப்பில் செயல்படுத்துவது, இயற்கை வேளாண் வளர்ச்சித் திட்டம் என நடப்பாண்டிலேயே திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறோம்.” என்று முதல்வர் பேசியிருக்கிறார். மேலும் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களையும் முதல்வர் பட்டியலிட்டுள்ளார். 

click me!