
குஜராத் தேர்தல் முடிவுகள் மூலம் மக்களிடம் பிரதமர் மோடி மீதான நம்பிக்கை குறைந்துள்ளதை பார்க்க முடிவதாக காங்கிரஸ்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. ஏற்கனவே குஜராத்தில் ஆட்சியில் இருந்த பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.
அதே நேரத்தில் காங்கிரஸ் கைவசமிருந்த இமாச்சல பிரதேச ஆட்சியை அக்கட்சியை இழந்தது. காங்கிரஸ் கட்சி இந்த இரு மாநிலங்களில் தோல்வியடைந்தாலும், ராகுல் காந்தி ஒன்மேன் ஆர்மியாக இருந்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
குஜராத் மாநிலத்தில் அசைக்கமுடியாத சக்தியாக இருந்த பாஜகவை தனது கூட்டணி வியூகங்கள் மூலமாகவும், தேர்தல் பிரச்சார யுக்திகள் மூலமாகவும் அலறித் துடிக்கவைத்தார்.
கடந்த தேர்தலில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகளைவிட அதிக சதவீத வாக்குகள் பெற்றதோடு மட்டுமல்லாமல், கூடுதல் எம்எல்ஏக்களையும் காங்கிரஸ் பெற்றுள்ளது. காங்கிரஸ் தோல்வி அடைந்தாலும் ராகுல் காந்திக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரசுக்கு நியாயமான வெற்றி கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த ஓட்டுக்கள் மூலம், குஜராத் மக்கள் மோடி மீதான நம்பிக்கையை குறைத்துள்ளது என்றும், பிரசாரத்தில் மோடி ஊழல் குறித்து ஏன் பேசவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
மோடி தன்னை பற்றியே பெருமையாக பேசினார். அவரது தவறான தகவல்களுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். மோடியின் குஜராத் மாடல் குழியில் தள்ளப்பட்டுள்ளது. குஜராத்தில் இந்த தேர்தல் மூலம் பா.ஜ.,வுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் எனவும் ராகுல் குறிப்பிட்டார்..
எங்களின் கடுமையான உழைப்புக்கு போதிய பரிசு கிடைத்துள்ளது என்றும் இந்த தேர்தல் மூலம் நாங்கள் நல்ல பாடம் கற்றுள்ளோம் என்றும் ராகுல் கூறினார்.