7 பேர் விடுதலையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.. முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கும் காங்கிரஸ் தலைவர் அழகிரி..

By Ezhilarasan BabuFirst Published May 21, 2021, 10:49 AM IST
Highlights

எழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றும், அவர்கள் விடுதலையில் அரசியல் அழுத்தம் இருக்க கூடாது என்றும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கூறியுள்ளார். 

எழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றும், அவர்கள் விடுதலையில் அரசியல் அழுத்தம் இருக்க கூடாது என்றும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 21ம் நூற்றாண்டை நோக்கி இந்தியாவை அழைத்து சென்றவர் ராஜிவ்காந்தி என்றும், தொழில்துறையில் மாபெரும் சாதனையை உருவாக்கிய அவர், தமிழர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் என்றும் புகழாரம் தெரிவித்தார். நேற்றைய தினம் எழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்திற்கு, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒப்புதல் கிடையாது என்றும், ஆரம்பத்தில் இருந்தே குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதை நீதிமன்றங்களே செய்ய வேண்டுமே தவிர, அரசியல் அழுத்தம் கொடுக்க கூடாது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழர்கள் 100க்கும் மேற்பட்டோர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். எனவே தமிழர்கள் என்ற ஒரு காரணத்திற்காக 7 பேரை மட்டும் விடுதலை செய்வது என்பது ஏற்புடையது அல்ல என்று கூறிய கே.எஸ்.அழகிரி, திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே எழுவர் விடுதலை குறித்து வாக்குறுதி அளித்து இருந்தனர், ஆனால் காங் அதுகுறித்து எதுவும் வலியுறுத்தவில்லை என்றும் கூறினார். அதேபோல் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தேர்வில் எந்தவித காலதாமதமும் இல்லை என்ற அவர், இதுகுறித்து மேலிடம் முடிவு செய்யும் என்றும் கூறினார்.

click me!