
போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு சார்பாக முதற்கட்டமாக 5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை, குரோம் பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி நிலைய வளாகத்தில் போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக அமைச்சர் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான பேச்சவார்த்தை நடைபெற்றது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 13 வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னும் 14 வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. இந்த புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊதிய உயர்வு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சென்னை, குரோம் பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். ஏற்கெனவே 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வு அமல்படுத்தபடாமல் உள்ள காரணத்தால் இன்றைய பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு சார்பாக முதற்கட்டமாக 5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிற்சங்கங்கள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது.
8 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள், அரசு 5 சதவீதம் அளிக்க முன்வந்துள்ளது. மேலும் சில கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் இலவசமாக பயணிக்கின்ற காரணத்தினால் அவர்களுடைய எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பேட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதையும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்து கழகத்திற்கும் தனித்தனியாக நிலை ஆணை இருப்பதை மாற்றி பொதுவான நிலை ஆணை இருக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார்கள், அத்தனையும் ஏற்று நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.