கபினி அணையில் இருந்து மீண்டும் பொங்கும் காவிரி…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….

First Published Jun 28, 2018, 11:54 AM IST
Highlights
Water release from kabini 15000 cubic in cauvery river


கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து  மீண்டும் 15000 கனஅடி  உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகம் நோக்கி மீண்டும் நுங்கும், நுரையுமாக பொங்கி வரும் இந்த காவிரி நீரைப் பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த 15 நாட்களில் விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

தற்போது குடகு மற்றும் அதனைச் சுற்றியுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கபினி  அணைக்கு 15000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது..

கபினி அணையின் முழு கொள்ளளவு 83 அடி ஆகும். தற்போது அந்த அணையில் 82.75 அடி அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. அதே நேரத்தில் கபினிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் வேறு வழி இல்லாமல்  தண்ணீர் திறந்துவிட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதையடுத்து தற்போது கபினி அணியில் இருந்து 15 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இது காவிரியில் தமிழகம் நோக்கி வரத் தொடங்கியுள்ளது. கடந்த 4 நாட்களாக மழை இல்லாததால் அந்த அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து  கர்நாடகாவில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் தமிழத்துக்கு வரத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!