வாக்கு எண்ணும் மையம்..! ஸ்ட்ராங் ரூம் அருகே வைஃபை ரூட்டர்..! பதற்றத்தில் விசிக வேட்பாளர்கள்..!

By Selva KathirFirst Published Apr 20, 2021, 11:41 AM IST
Highlights

விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் செய்யூர் மற்றும் வானூர் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அருகே வைஃபை ரூட்டர்கள் பொருத்தப்பட்டிருந்தது அக்கட்சி வேட்பாளர்களை அதிர வைத்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் செய்யூர் மற்றும் வானூர் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அருகே வைஃபை ரூட்டர்கள் பொருத்தப்பட்டிருந்தது அக்கட்சி வேட்பாளர்களை அதிர வைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ந் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம் பதிவான வாக்குகள் அடங்கிய இவிஎம் மெசின்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 75 மையங்கள் தயார் செய்யப்பட்டு தொகுதிவாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்கு பிறகே வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதாவது வரும் மே 2ந் தேதி தான் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதனால் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள மையங்களில் அரசியல் கட்சியினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் செய்யூர் தொகுதி விசிக வேட்பாளர் பனையூர் பாபு தினசரி காலை 11 மணி அளவில் வாக்கு எண்ணும் மையத்தில் தனது தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று காலை வாக்குப்பதிவு எந்திரங்கள் இருக்கும் ஸ்ட்ராங்க் ரூமை பார்வையிட அவர் சென்றார். அப்போது ஸ்ட்ராங் ரூம் அறைக்கு அருகே உள்ள வாக்கு எண்ணும் அறையில் சிலர் இருந்துள்ளனர். அவர்கள் யாரென்று கேட்ட போது இணையதள இணைப்பு கொடுக்க வந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்து அந்த அறைக்குள் சென்று பார்த்த போது வைஃபை ரூட்டர் இருந்துள்ளது.

உடனடியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைக்கு அருகே வைஃபை ரூட்டரை எப்படி பொருத்தலாம் என்று பனையூர் பாபு அதிகாரிகளை கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்தையும் இணையதளம் மூலம் இணைக்க வேண்டியுள்ளது என்று அவர்கள் பதில் கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த பனையூர் பாபு, வைஃபை ரூட்டர்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்பதால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால் அதனை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் உடனடியாக வாக்கு எண்ணும் மையத்திலேயே அமர்ந்து பனையூர் பாபு தர்ணாவில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் நேற்று இரவு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வன்னியரசு போட்டியிடும் வானூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாக விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றுள்ளார். அப்போது, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங்க் ரூம் அருகே உள்ள அறையில் சிலர் இருந்துள்ளனர். அவர்கள் யார் என்று கேட்ட போது பிஎஸ்என்எல் ஊழியர்கள் என்றும் வைஃபை வசதி செய்து கொடுக்க வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரவிக்குமார், வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூம் அருகே வைஃபை வசதி எதற்கு என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்திலும் வைஃபை வசதி செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த ரவிக்குமார், அப்படி எந்த உத்தரவு யாரிடம் இருந்து வந்துள்ளது அதற்கான ஆணையை காட்ட வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். இப்படி ஒரே நாளில் விசிக வேட்பாளர்கள் போட்டியிடும் இரண்டு தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைக்கு அருகே வைஃபை ரூட்டர்கள் பொருத்தும் முயற்சி அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

click me!