ரயில் நிலையங்களில் விதிமீறல்.. களத்தில் இறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்.. சென்னையில் 3.90 கோடி அபராதம் வசூல்..

By Ezhilarasan BabuFirst Published Apr 20, 2021, 11:16 AM IST
Highlights

சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத நபர்களிடமிருந்து அபராத தொகை வசூலிக்கப்படுகிறது என  பெருநகர சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. 

சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத நபர்களிடமிருந்து அபராத தொகை வசூலிக்கப்படுகிறது என  பெருநகர சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முக கவசம் அணிதல்,  2 மீட்டர் இடைவெளியுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்தால், அவ்வப்பொழுது கைகளை சோப்பு கரைசல் மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தப் படுத்திக் கொள்ளுதல், கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் வாயினில் கிருமிநாசினி திரவங்கள் வைத்தல், போன்ற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அங்காடிகள் போன்றவற்றில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என மாநகராட்சி அலுவலர்களால் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக  நேற்று புரட்சித்தலைவி டாக்டர் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலைய வளாகத்தில் முக கவசம் அணியாத நபர்களிடமிருந்து 56 ஆயிரம் ரூபாய் மாநகராட்சி அலுவலர்களால் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் தென்னக ரயில்வே உதவி மேலாளர் திரு. முருகன் அவர்களை பெருநகர சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல அலுவலர் ஜி. தமிழ் செல்வன் அவர்கள் நேரில் சந்தித்து ரயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். 

தொடர்ந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் தனிமனித இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பெருநகர் சென்னை மாநகராட்சியால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து 18-4-2021 அன்று வரை மொத்தம் 3.90 கோடி அபராத தொகையை வசூலிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை வசூலிப்பது என்பது அரசின் நோக்கமல்ல, பொதுமக்கள் தங்களின் தவறை உணர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!