
சசிகலா, தினகரன் ஆகிய இருவருமே சிறையில் உள்ளதால், கட்சி மற்றும் ஆட்சியில் மூக்கை நுழைக்க முடியாமல், அவரது உறவுகள் அனைத்தும் தவியாய் தவித்து வருகின்றன.
மேலும், தினகரன் மனைவி அனுராதா தலையீட்டின் பேரில், சின்னம்மா மற்றும் தினகரானால் மட்டுமே, கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்த முடியும் என்று பலரை பேட்டி கொடுக்க வைத்து, அந்த பேட்டிகள் ஜெயா டி.வி யில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அரசியலில் நம் குடும்பம் இல்லை என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அப்போதுதான், மக்களுக்கு நம் குடும்பத்தின் மீதுள்ள கோபம் தீரும் என்று சசிகலா, விவேக் மூலம் குடும்ப உறவுகளுக்கு சொல்லி அனுப்பி உள்ளார்.
அதே போல், ஜெயா டி.வி நிர்வாகத்திலும், விவேக்கை தவிர யாரும் தலையிட கூடாது என்றும் சசிகலா கண்டிப்பாக சொல்லி விட்டார்.
இதையடுத்து, ஜெயா டி.வி யின் முக்கிய நிர்வாகி ஒருவரை போயஸ் தோட்டத்திற்கு அழைத்த விவேக், நானும் என் மனைவி அர்ச்சனாவுமே ஜெயா டி.வி நிர்வாகத்திற்கு பொறுப்பெற்றுள்ளோம்.
அதனால், எதுவாக இருந்தாலும், எங்களை கேட்டுதான் செய்ய வேண்டும், மற்றவர்கள் யாராவது, எதையாவது சொன்னால் அதை கேட்க கூடாது என்று கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளார்.
ஜெயா டி.வி நிர்வாகத்தை கவனித்து வந்த தினகரன் மனைவி அனுராதா, கடந்த 2011 ம் ஆண்டு, சசிகலா உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் ஜெயலலிதா கட்சியை விட்டு நீங்கியதால், ஜெயா டி.வி பக்கமே வராமல் இருந்தார்.
ஆனால், தினகரன் துணை பொது செயலாளர் ஆகி, ஆர்.கே.நகர் இடை தேர்தலில் போட்டியிட்டபோது, மீண்டும் ஜெயா டி.வி.அலுவலகம் வந்து அங்கிருக்கும் ஊழியர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார்.
தினகரன் திகார் சிறைக்கு சென்ற பின்னர், சின்னம்மாவும், தினகரனும் இருந்தால் மட்டுமே கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்த முடியும் என்று பேட்டி எடுத்து ஒளிபரப்ப உத்தரவிட்டார்.
இவை அனைத்தும், தங்கள் குடும்பத்தின் மீது மக்கள் கொண்டுள்ள கோபத்தை அதிகப்படுத்தும் என்று உணர்ந்த சசிகலா, குடும்ப உறவுகள் யாரும், கட்சி, ஆட்சி, ஜெயா டி.வி ஆகியவற்றில் கண்டிப்பாக தலையிட கூடாது என்று கூறி விட்டார்.
இதையடுத்து, ஜெயா டி.வி யின் ஒட்டு மொத்த நிர்வாகத்திலும், எந்த குறுக்கீடும் இல்லாமல், சுதந்திரமாக செயல்பட, விவேக்குக்கும் அவர் மனைவி அர்ச்சனாவுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.