யூடியுப்பில் சாதனை படைத்த வில்லேஜ் குக்கிங் சேனல்... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தமிழக கிராமத்தினர்..!

By Thiraviaraj RMFirst Published Jul 5, 2021, 11:35 AM IST
Highlights

கிராமத்தைச் சேர்ந்த 'வில்லேஜ் குக்கிங் சேனல்' குழுவினர் இன்று ஒரு கோடி சப்ஸ்கிரைப் பெற்று தென்னிந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். 


'வில்லேஜ் குக்கிங் சேனல்' யூ-டியூப் சேனல் ஒரு கோடி சப்ஸ்கிரைப் பெற்ற தென்னிந்தியாவின் முதல் யூ-ட்யூப் சேனல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கான அங்கீகாரமாக டைமண்ட் பட்டனையும் யூ-ட்யூப் நிறுவனம் இவர்களுக்கு அளித்துள்ளது.

இதையடுத்து யூ-ட்யூப் சேனலில் கிடைத்த வருமானத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து 'வில்லேஜ் குக்கிங் சேனல்' குழுவினர் வழங்கினர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, 'வில்லேஜ் குக்கிங் சேனல்' குழுவினரோடு கலந்துகொண்டு அவர்கள் சமைத்த காளான் பிரியாணியை சாப்பிட்டு பாராட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள், யூடியூபில் பிரபலமான 'வில்லேஜ் குக்கிங் சேனலை' நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து 'வில்லேஜ் குக்கிங் சேனல்' யூ-டியூப் குழுவினர் கூறுகையில், "கொரோனாவை எதிர்த்து தமிழ்நாடு அரசு பல்வேறு விதமாகப் போராடி வருகிறது. அரசுக்கு உதவி செய்யும் விதமாகவும், மக்களுக்கு நமது உதவி நேரடியாகச் சென்று சேரும் விதமாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேரடியாக கொரோனா நிவாரண நிதி வழங்கினோம்.

முதலமைச்சரை நேரில் சந்திப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த வாழ்ப்பை எங்களுக்கு வழங்கினார்கள். கொரோனா நிதியை வாங்கிக் கொண்டு, 'நீங்க நல்லா பண்றீங்க' எனச் சொல்லி எங்களிடம் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கிராமத்து இளைஞர்களான எங்களைத் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளனர்.

கிராமத்தைச் சேர்ந்த 'வில்லேஜ் குக்கிங் சேனல்' குழுவினர் இன்று ஒரு கோடி சப்ஸ்கிரைப் பெற்று தென்னிந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும் இவர்களது மைல்கல் சாதனைக்கும், மனிதாபிமான உதவிக்கும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

click me!