போலி சாதி சான்றிதழில் எம்.பி.யான விஜயகாந்த் பட நடிகை... அதிரடியாக ரத்து செய்த உயர் நீதிமன்றம்..!

By Asianet TamilFirst Published Jun 8, 2021, 9:36 PM IST
Highlights

போலி சாதி சான்றிதழ் பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் தனித் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் பட நடிகை நவ்னீத் கெளரின் சான்றிதழை மும்பை உயர் நீதிமன்றம் நாக்பூர் கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. 
 

தமிழில் ‘அரசாங்கம்’ படத்தில் விஜயகாந்த், ‘அம்பாசமுத்திரம்’ படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக நடித்தவர்நடிகை நவ்னீத் கெளர். இவர் தெலுங்கிலும் பிஸியாக நடிகையாக இருந்தார். கடந்த 2011-இல் மஹாராஷ்டிர மாநில சுயேட்சை எம்.எல்.ஏ ரவி ராணாவை இவர் திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து நவ்னீத்தும் அரசியல்வாதியானார். 2014 ஆம் ஆண்டு அமராவதி நாடாளுமன்ற தனித்தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர், அதே தொகுதியில் 2019-ல் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆதரவுடன் சுயேட்சையாகப் போட்டியிட்டு நவ்னீத் வெற்றி பெற்றார்.
 ஆனால், இவருடைய வெற்றியை எதிர்த்து சிவசேனா கட்சி மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தது. அக்கட்சி தாக்கல் செய்த மனுவில், “அமராவதி தனித்தொகுதியில் எஸ்.சி. என்று போலியாகச் சாதி சான்றிதழ் பெற்று நவ்னீத் கெளர் வெற்றி பெற்றுள்ளார். நவ்னீத் பஞ்சாபைச் சேர்ந்தவர். மஹாராஷ்டிராவில் எஸ்.சி. பிரிவின் கீழ் வராத லபானா என்ற சமூகத்தைச் சேர்ந்தவர். தேர்தலுக்காக சாதி சான்றிதழை போலியான ஆவணங்களைக் காட்டி பெற்றுவிட்டார்” என்று குற்றம் சாட்டியிருந்தது சிவசேனா கட்சி.


இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நடிகையும் எம்.பி.யுமான நவ்னீத் கெளரின் சாதி சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்தனர். ஆறு வாரங்களுக்குள் எல்லா சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாக நடிகை நவ்னீத் கெளர் அறிவித்துள்ளார். 

click me!