விமான நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை! பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணிக்கு ஓ.கே. சொன்ன கேப்டன்!

By Selva KathirFirst Published Feb 17, 2019, 12:17 PM IST
Highlights

இரண்டு மாத சிகிச்சைக்குப்பின் சென்னை திரும்பிய தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தி, கூட்டணியை முடிவு செய்வதற்கு, தேமுதிக, தலைமை முடிவெடுத்துள்ளது.  

சென்னை வந்து இறங்கிய அடுத்த சில மணி நேரங்களில் கேப்டனை சந்தித்து கூட்டணி குறித்து பேசிச் சென்றுள்ளார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வெள்ளியன்று நள்ளிரவு சென்னை திரும்பினார் கேப்டன். பொதுவாக விமான நிலைய ஓய்வறையில் ஒரு நபருக்கு 2 மணி நேரம் அதிகபட்சமாக 4 மணி நேரம் மட்டுமே தங்க அனுமதி அளிக்கப்படும். கூடுதல் நேரம் தேவை என்றால் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதியை பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட வி.வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே இந்த சலுகை உண்டு.

இந்த நிலையில் சென்னை திரும்பிய விஜயகாந்த் வழக்கம் போல் இரவோடு இரவாக வீடு திரும்ப விரும்பவில்லை. ஏனென்றால் இது தேர்தல் நேரம். மேலும் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என்பதை பார்த்தே தொகுதி ஒதுக்கீடு என்று பிரதான கட்சிகள் கூறி வருகின்றன. எனவே தமிழகத்திற்கு விஜயகாந்தை காட்டுவதோடு தொண்டர் பலத்தையும் காட்ட பிரேமலதா முடிவு செய்தார்.

இதனால் தான் சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவு 3 மணிக்கு வந்தாலும் காலை எட்டு மணிக்கு தான் வெளியே வர கேப்டன் திட்டமிட்டார். ஆனால் எட்டு மணிக்கு பிறகும் கேப்டன் வெளியே வருவதற்கான அறிகுறியே இல்லை. இதற்கு காரணம் எதிர்பார்த்த கூட்டம் கூடாததது தான். பின்னர் ஒரு வழியாக காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் அனகாபுத்தூர் முருகேசன் ஒரு கூட்டத்தை அப்படியே அள்ளிக் கொண்டு வந்தார்.

பின்னர் ஒரு வழியாக கேப்டன் பிற்பகலில் வெளியே வந்தார். இதற்கிடையே விமான நிலையத்தில் வி.ஐ.பிக்கள் அறையில் தங்கியிருந்த விஜயகாந்தை காலையில் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று சந்தித்துள்ளார். சென்னையில் இருந்து மதுரை செல்ல விமான நிலையம் சென்ற அவர் நேராக வி.ஐ.பி அறைக்கு சென்று விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவுடன் பேசியுள்ளார். அ.தி.மு.கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரங்களை கூறி தே.மு.தி.கவும் கூட்டணிக்கு வந்தால் என்னென்ன பலன் என்பதை பட்டியலிட்டுள்ளார்.

மேலும் நாளை சென்னை வரும் பியூஸ் கோயலுடன் சுதீஷ் அல்லது பிரேமலதாவை சந்திக்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் பொன்னார் செய்து முடித்துள்ளார். தற்போதைய சூழலில் தே.மு.தி.கவிற்கு கணிசமான தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் இணைவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட தயார் என்கிற நிலைக்கு கேப்டன் வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.

இப்படி ஒரு நிலைக்கு கேப்டன் வருவதற்கு காரணமே பொன்னார் தானாம். ஏனென்றால் விமான நிலைய வி.ஐ.பி அறையில் சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக கேப்டன் இருப்பதற்கு சிறப்பு அனுமதி பெற்றுக் கொடுத்ததே பொன்னார் தான். மேலும் சென்னை வந்து இறங்கிய அவரை முதல் ஆளாக சந்தித்து உடல் நலன் விசாரித்த கையோடு கூட்டணி பேச்சுவார்தையையும் ஆரம்பித்துவிட்டதாக சொல்கிறார்கள்.

click me!