
உடல் நிலை பாதிக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் திடீரென அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமலேயே விஜயகாந்த் சென்னை திரும்பினார். தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கும் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவை கட்சியின் பொருளாளராக நியமித்துள்ளார்.
மூத்த மகன் விஜயபிரபாரகனையும் அரசியலில் விஜயகாந்த் களம் இறக்கிவிட்டார். இதனை தொடர்ந்து தனது உடல்நிலையை கவனிக்கும் பொருட்டு மீண்டும் சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளார். கடந்த முறை சென்றுசிகிச்சை பெற்ற அதே மருத்துவமனைக்கு தான் இந்த முறையும் விஜயகாந்த் செல்ல உள்ளார். கடந்த முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாத நிலையில் இந்த முறை அமெரிக்காவில் விஜயகாந்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விஜயகாந்த் அமெரிக்கா செல்வதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகளை அவரது மைத்துனரும் கட்சியின் துணைச் செயலாளருமான சுதீஷ் மேற்கொண்டு வருகிறார். வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் தே.மு.தி.கவின் மாநில மாநாட்டை நடத்த பிரேமலதா முடிவு செய்துள்ளார். மாநாட்டுக்கு முன்னதாக சிகிச்சை முடிந்து விஜயகாந்த் சென்னை திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருப்பூரில் நடைபெறுவதாக இருந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மாநாட்டை மீண்டும் திருப்பூரிலேயே வைப்பதா அல்லது சென்னை அருகே ஏதேனும் ஒரு இடத்தில் மாநாட்டை அறிவிப்பதா என்பது குறித்தும் பிரேமலதா ஆலோசித்து வருகிறார்.