கேரளா மாதிரி எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பு இங்க இல்ல…புயல் சேத பகுதிகளை பார்வையிட்ட எடப்பாடி குற்றச்சாட்டு !!

By Selvanayagam PFirst Published Nov 20, 2018, 10:54 AM IST
Highlights

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும்  கண்டிப்பாக நிவாரணம் வழங்கப்படும் என்றும் கேரள வெள்ளத்தின் போது அங்கு எதிர்கட்சிகள் அளித்த ஒத்துழைப்பு போல் தமிழகத்தில் இல்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை. புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சென்ற அமைச்சர்களுக்க பொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். முதலமைச்சர் இன்னும் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பி இருந்தனர். எதிர்க்கட்சிகளும் முதலமைச்சரை அஇந்த விஷயத்தில் வறுத்தெடுத்துவிட்டனர்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் புயல் சேதத்தை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டார். காலை 8 மணியளவில் திருச்சி வந்து சேர்ந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புயல் சேத பகுதிக்கு சென்றார். பின்னர் புயல் சேதங்களை நேரில் பார்வையிட்டார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் உடன் சென்று புயல் சேதங்களை ஆய்வு செய்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிளையார்குளத்தில் புயல் சேதங்களை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலால் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு குறைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி வருகிறது. புதுக்கோட்டை நகரத்தில் நாளை மாலைக்குள் மின் இணைப்பு முழுமையாக வழங்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யவேண்டும்.  அதேபோல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வரும் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் விரைவாக பணிகள் முடிந்து இயல்பு நிலை திரும்பும் என தெரிவித்தார்.. 

புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்று கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேரள வெள்ளத்தின் போது அங்கு எதிர்கட்சிகள் அளித்த ஒத்துழைப்பு போல் தமிழகத்தில் இல்லை என்றும், திமுக , அமமுக போன்ற எதிர்கட்சிகள் இதை அரசியலாக்குவதாகவும்  குற்றம்சாட்டினார்.

இதையடுத்து தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களிலும் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.
 

click me!