''தொழிலாளர்களின் பணத்தை எடுத்து ஏப்பம் விட்டு விட்டது அதிமுக அரசு'' - கர்ஜிக்கும் விஜயகாந்த்

First Published May 15, 2017, 12:25 PM IST
Highlights
vijayakanth condemns admk government about bus strike


தொழிலாளர்களின்  பணத்தை எடுத்து போக்குவரத்து கழகங்கள் மற்ற செலவினங்களை செய்துவிட்டு, ஊழலும் செய்து, போக்குவரத்து துறையில் பணிபுரிகின்ற தொழிலாளர்களை வஞ்சித்துவிட்டது ஆளும் அதிமுக அரசு என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு அரசின் மெத்தனப்போக்கே முக்கிய காரணமாக உள்ளது. சரியான நிர்வாகம் இல்லாத, அரசினுடைய வெளிப்பாடாக தான் போக்குவரத்து கழகம் சார்பாக, அரசு பேருந்துகள் இயக்கப்படாததற்கு காரணம். 

இதற்கு முக்கிய காரணமாக போக்குவரத்து கழகங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும், ஊழியர்களின் பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வுகாண கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை கணக்கில் சேர்க்க வேண்டும். 

ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவைத் தொகை, பணியில் உள்ள தொழிலாளர்களின் நிலுவைத் தொகை, ஓய்வு கால சேமநலத்திட்ட பணப்பலன் நிறுத்தப்பட்டதை நிலுவையுடன் வழங்குவதோடு மட்டுமல்லாமல், அரசுத்துறை ஊழியர்களைவிட போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, குறைவான ஊதியமாகவே உள்ளது. எனவே ஊதிய முரண்பாடுகளை சரிசெய்து சம்பள உயர்வு கொடுக்க வேண்டும்.

தினக்கூலி, சேமபணியாளர், தினஊதியம், நிரந்தர பணி, வேலைபளு, பதவி உயர்வு, பணியாளர்களின் எண்ணிக்கை, தண்டனை முறைகள் சம்மந்தமாக கடந்த 12வது ஊதிய ஒப்பந்தகளில் பேசி தீர்க்கப்பட்ட ஒப்பந்த பிரிவுகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றி அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. 

தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை உரிய கணக்கில் செலுத்தாமல், இப்பணத்தை போக்குவரத்து கழகங்கள் மற்ற செலவினங்களை செய்துவிட்டு, ஊழலும் செய்து, போக்குவரத்து துறையில் பணிபுரிகின்ற தொழிலாளர்களை வஞ்சித்துவிட்டது. இந்த அரசு இத்துறையில் முற்றிலும் ஊழல் செய்ததன் விளைவுதான் இன்றைக்கு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படாது என்று தொழிற்சங்கங்கள் சொல்வதற்கு முழுக்காரணம். 

ஆளும் அரசு, போக்குவரத்து துறை அமைச்சரும், அதிகாரிகளும், தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கி, வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஏனெனில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ஏழை, எளிய மக்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை நம்பிதான் பயணம் செய்கிறார்கள். 

இதனால் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து துறையின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணம் நிர்வாக சீர்கேடும், ஊழலும் தான். என அதில் கூறியுள்ளார்.

click me!