அமைச்சர் பதவியை பறித்தால் ஆட்சி அம்பேல்... எடப்பாடியை எச்சரித்த விஜயபாஸ்கர்!

First Published May 8, 2017, 2:11 PM IST
Highlights
Vijayabaskar Warn Edapadi K Palanisamy regards his minister posting


அமைச்சராக இருந்து அதிகாரத்தோடு வலம் வந்த நான், முதல்வர் பதவிக்கு வந்து மோசம் போய்விட்டேனே என்று எடப்பாடி புலம்பி வருகிறார்.

அந்த அளவுக்கு, நெருக்கடி மேல் நெருக்கடி அவரை வாட்டி எடுக்கிறது. உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி என்பதுபோல, மத்திய அரசின் இடி ஒரு பக்கம், அமைச்சர்களின் இடி ஒருபக்கம் என அவர் இருபக்க அடிகளையும் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்.

சசிகலா கைது, தினகரன் கைது, இரட்டை இலை முடக்கம் என இருக்கும் நெருக்கடிகள் போதாதென்று, சேகர் ரெட்டியின் டைரி குறிப்பை வைத்து, வருமான வரித்துறை மிரட்டும் மிரட்டலால், முதல்வர் மட்டுமன்றி, முக்கிய அமைச்சர்கள் பலரும் ஆடிப்போய் உள்ளனர்.

அதனால், முதல் கட்டமாக, வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கிய, அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்கலாம் என்று முடிவெடுத்தார், முதல்வர் எடப்பாடி.

அதை கேள்விப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், தம்மிடம் 20 எம்.எல்.ஏ க்கள் இருப்பதாகவும், அமைச்சர் பதவியை பறித்தால், ஆட்சியை கவிழ்த்து விடுவேன் என்றும், எடப்பாடி தரப்பினரை மிரட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே, தமது அடியாட்களை கொண்டுவந்து நிறுத்தி, அமைச்சர்களை கண்காணித்து வந்தார் விஜயபாஸ்கர். அத்துடன், கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட எம்.எல்.ஏ க்கள் தப்பித்து விடாமல் இருக்க, விஜயபாஸ்கரின் அடியாட்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 20 எம்.எல்.ஏ க்களை, பணம் மற்றும் இதர உதவிகள் செய்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் விஜயபாஸ்கர். அவர்கள் யாரையும், யாராலும் எதுவும் செய்யமுடியாது என்றும், தாம் சொல்வதை மட்டுமே கேட்பார்கள் என்றும் தெனாவட்டாக கூறி வருகிறார் அவர்.

எனவே, தமது அமைச்சர் பதவியை பறித்தால், ஆட்சியை கவிழ்த்து விடுவேன் என்றும் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தார். தற்போது அந்த அச்சுறுத்தல் இன்னும் தீவிரம் அடைந்துள்ளது.

இதனால், ஒருபக்கம், வருமான வரித்துறைக்கு பதில் சொல்ல முடியாமலும், இன்னொரு பக்கம் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்களை கட்டுப்படுத்த முடியாமலும் திணறி வருகிறார் முதல்வர் எடப்பாடி.

கூவத்தூரில், எம்.எல்.ஏ க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது, சசிகலா சிறை செல்ல நேர்ந்ததால், சசிகலா குடும்பத்தில் தமக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, முதல்வர் ஆகிவிடலாம் என்று முயற்சித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

ஆனால், எடப்பாடிக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததால், தினகரனுடனான தமது நெருக்கத்தை பயன்படுத்தி, எடப்பாடியை மதிக்காமல், தன்னிச்சையாக செயல்பட்டு வந்தார் விஜயபாஸ்கர்.

வருமான வரி சோதனைக்கு பின்னர், கடும் சோதனைகளை சந்தித்தாலும், தமது அமைச்சர் பதவியை விட்டு கொடுக்க அவர் தயாராக இல்லை.

ஒரு வேளை, அவர் அமைச்சர் பதவியை விட்டு நீக்கப்பட்டால், அது எடப்பாடி ஆட்சிக்கு சிக்கலை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்கின்றனர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்.

click me!