ஏறி அடித்த அதிமுக... களமிறங்கிய விஜய்... இறங்கி வந்த பாஜக... பின்வாங்கிய ரஜினி.. எடப்பாடி ரூட் கிளியர்..!

By Selva KathirFirst Published Dec 30, 2020, 6:07 PM IST
Highlights

ரஜினியை முன்னிலைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் அதிமுகவுடனான கூட்டணியை இறுதி செய்வதில் இழுத்தடித்து வந்த பாஜக எடப்பாடி பழனிசாமியின் அதிரடி அரசியலால் இறங்கி வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ரஜினியை முன்னிலைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் அதிமுகவுடனான கூட்டணியை இறுதி செய்வதில் இழுத்தடித்து வந்த பாஜக எடப்பாடி பழனிசாமியின் அதிரடி அரசியலால் இறங்கி வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் ரஜினி தலைமையில் பிரமாண்ட கூட்டணி அமைக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டு வந்தது. அப்படி அமையவில்லை என்றால் ரஜினி – அதிமுக கூட்டணியை உருவாக்கி அந்த கூட்டணியில் பங்குபெறவும் பாஜக திட்டமிட்டிருந்தது. இதனை முன்கூட்டியே உணர்ந்து தான் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தன்னை கூடிய சீக்கிரத்தில் அறிவித்துக் கொண்டார். ஆனால் அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை ஏற்க பாஜக தொடர்ந்து மறுத்து வந்தது. ஒரு கட்டத்தில் அதிமுகவுடனான கூட்டணியையே தங்கள் டெல்லி மேலிடம் தான் இறுதி செய்யும் என்று கூறி தமிழக பாஜக தலைவர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வர உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பு பாஜகவிற்கு உற்சாகத்தை கொடுத்தது. அதிமுக இல்லை என்றாலும் ரஜினியுடன் கூட்டணி என்று பாஜக காய் நகர்த்த ஆரம்பித்ததது. ஒருவேளை ரஜினி கூட்டணிக்கு வரவில்லை என்றாலும் ரஜினியை காட்டி அதிமுகவிடம் அதிக சீட், கூட்டணி ஆட்சி என்று பேரங்களை பாஜக முன்னெடுத்தது. அத்தோடு அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்து பாஜக பிடிவாதம் பிடித்து வந்தது. ரஜினியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி என்கிற ரீதியில் பாஜக தரப்பில் இருந்து அதிமுகவுடன் பேச ஆரம்பித்தனர்.

இதனால் உஷாரான எடப்பாடி பழனிசாமி அதிரடியாக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அத்தோடு ரஜினி அரசியல் வருகையை எதிர்கொள்வதற்கான வியூகங்களைவும் அவர் வகுக்க ஆரம்பித்தார். ரஜினி ஒரு வேளை அரசியல் களத்திற்கு வந்தால் அவரை எதிர்கொள்ள நடிகர் விஜயுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவில் நடிகர் விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்தித்தது மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் ரசிகர்களை 100 சதவீதம் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்த அல்ல என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விஷயங்களை எல்லாம் விஜய் ரகசியமாக இரவு நேரத்தில் முதலமைச்சரை சந்தித்து பேச வேண்டிய தேவை இல்லை என்கிறார்கள். இரவு சந்திப்பு மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதற்கு காரணம் விஜய் – எடப்பாடியார் அரசியல் பேசியது தான் என்கிறார்கள். அதிலும் கடந்த சில மாதங்களாகவே விஜய்க்கு சாதகமான விஷயங்களை அதிமுக எடுத்து வருகிறது. திமுகவிற்கு ஆதரவாக விஜயின் தந்தை அரசியல் கட்சி துவங்கிய நிலையில் அந்த கட்சியின் தலைவரை ஓட ஓட விரட்டி கைது செய்தது காவல்துறை. இந்த விஷயத்தில் நடிகர் விஜய்க்கு அதிமுக அரசு மிகவும் பக்கபலமாக இருந்து வருகிறது.

இதே போல் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பதாக முதலமைச்சர் தரப்பில் இருந்து ஏற்கனவே விஜயிடம் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் தான் மாஸ்டர் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யாமல் விஜய் திரையரங்கில் வெளியிடுவது என்பதில் உறுதியாக இருந்ததாக கூறுகிறார்கள். இந்த நிலையில் விஜய்க்கு இவ்வளவு சாதகமான விஷயங்களை செய்து கொடுத்த எடப்பாடி பழனிசாமி தேர்தல் சமயத்தில் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டதாக சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் தான் விஜய் இரண்டு நாட்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார்.

இதனிடையே விஜய் அதிமுகவிற்கு சாதகமாக களம் இறங்க உள்ள தகவல் பாஜகவை டென்சன் ஆக்கியதாக கூறுகிறார்கள். அதே நேரத்தில் உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் முடிவில் இருந்து ரஜினி பின்வாங்கியது அந்த கட்சிக்கு அதிர்ச்சியாக அமைந்துவிட்டது. இனி தமிழகத்தில் திமுக – அதிமுகவிற்கு மாற்றாக வலுவான கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதை பாஜக உணர்ந்துகொண்டது. அத்தோடு கடந்த சில நாட்களாக அதிமுக தலைவர்கள் கூட்டணி அரசு இல்லை, தேசிய கட்சிகள் உண்மையை உணர வேண்டும் என்று வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டனர்.

இவை அனைத்துமே பாஜகவை சமாளிக்க எடப்பாடி பழனிசாமி வகுத்த வியூகங்கள் தான் என்கிறார்கள். ரஜினியை சமாளிக்க விஜய், பாஜகவை வழிக்கு கொண்டு வர கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் என வரிசையாக எடப்பாடி நகர்த்திய காய் தற்போது பாஜகவை தமிழக அரசியலில் தனிமைப்படுத்திவிட்டது. இனி அதிமுகவுடன் கூட்டணி, முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பது என்கிற வாய்ப்புகளை தவிர அந்த கட்சிகு வேறு வாய்ப்புகள் இல்லை. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தினால் மட்டுமே பாஜக சட்டமன்றத்திற்கு தங்கள் கட்சியை சேர்ந்த ஒரு சிலரையாவது அனுப்ப முடியும். ஆக, எடப்பாடி ரூட் கிளியர் ஆகிவிட்டது.

click me!