அ.தி.மு.கவினரை எதிர்கொள்வது எப்படி? ரசிகர்களுக்கு விஜய் பிறப்பித்த உத்தரவு!

By sathish kFirst Published Nov 9, 2018, 9:27 AM IST
Highlights

தமிழகம் முழுவதும் சர்கார் பட பேனர்களை கிழித்து அ.தி.மு.கவினர் ரகளையில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் தலைமை பொறுப்பாளரிடம் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் தகவல் பறந்து கொண்டிருக்கிறது.

மதுரையில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் முதல் முதலாக சர்காருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.அந்த போராட்டத்தின் போது மதுரை சினிப்பிரியா திரையரங்கு முன்பு அ.தி.மு.கவினர் கூடினர். ஆனால் அங்கு விஜயின் பேனர் மீது யாரும் கைவைக்கவில்லை. அதே சமயம் கோவையில் திடீரென சாந்தி திரையரங்குக்கு வந்த அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியினர் விஜயின் பேனரை கிழித்து ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து சென்னை காசி திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த விஜயின் பிரமாண்ட கட் அவுட்டை அ.தி.மு.கவினர் அடித்து நொறுக்கி கீழே தள்ளினர். மேலும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ், தேவி திரையரங்குகளிலும் விஜய் பேனர்கள் கிழிக்கப்பட்டன. உதகையில் நடிகர் விஜயின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு எதிரான வசனமே அனைத்திற்கும் காரணம் என்று கூறி போராட்டம் நடைபெற்றாலும் அரசு ஏழை மக்களுக்கு வழங்கும் இலவச திட்டங்களை விமர்சித்தற்கும் சர்காருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இப்படியாக விஜய்க்கு எதிராக அ.தி.மு.கவினர் தமிழகம் முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ஆனால் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தும் இந்த விவகாரத்தில் அவர்கள் இதுவரை எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. கோவையில் கூட சாந்தி திரையரங்கிற்கு வந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் கிழிக்கப்பட்ட பேனர்களை அகற்றிவிட்டு சென்றுவிட்டனர். 

இதே நிலை தான் தமிழகம் முழுவதும் நிலவுகிறது. அதாவது அ.தி.மு.கவினருக்கு விஜய் ரசிகர்கள் யாரும் எதிர்வினையாற்றவில்லை. இது குறித்து விசாரித்த போது தான் காலையில் பிரச்சனை தொடங்கிய உடனேயே அனைத்து மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் தலைமையை தொடர்பு கொண்டுள்ளனர். மேலும் அ.தி.மு.கவிற்கு எதிராக போராட அனுமதிக்க வேண்டும் என்றும் தலைமையிடம் கேட்டுள்ளனர்.

இந்த தகவல் உடனடியாக நடிகர் விஜய் மற்றும் ரசிகர் மன்ற நடவடிக்கைகளை கவனித்து வரும் விஜயின் தந்தை எஸ்.ஏ.சிக்கு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் எந்த இடத்திலும் அ.தி.மு.கவினருடன் மோதல் ஏற்பட்டுவிடக்கூடாத என்கிற உத்தரவை விஜய் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக ரசிகர் மன்ற பொறுப்பாளர் மூலம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் உடனடியாக பகிரப்பட்டுள்ளது.

மேலும் ரசிகர் மன்றத்தை சேர்ந்த யாரும் எந்த இடத்திலும் போராட்டம் – ஆர்பாட்டம் – மறியல் – ரகளையில் ஈடுபடக்கூடாது என்றும் தலைமை கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றும் தற்போதைய சூழலில் ரசிகர்கள் உம்மென்றும், கம்மென்றும் இருந்தால் போதும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால் தான் விஜய் ரசிகர்கள் நடப்பதை பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் பதற்றமான ஒரு நிலையில் விஜய் தனது ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கூறியிருப்பது அவர் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளதாக அரசியல்நோக்கர்கள் கூறுகின்றனர்.

click me!