கடந்த சில நாட்களாக எம்ஜிஆருடன் நடிகர் விஜயை ஒப்பிட்டு அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்து வந்த நிலையில் தற்போது ரஜினியை விமர்சித்தும் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதன் பின்னணி தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களாக எம்ஜிஆருடன் நடிகர் விஜயை ஒப்பிட்டு அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்து வந்த நிலையில் தற்போது ரஜினியை விமர்சித்தும் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதன் பின்னணி தெரியவந்துள்ளது.
நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை உண்டு. அதனை தூண்டி ஆதாயம் அடைய சரியான நேரம் பார்த்து காத்திருப்பவர் அவரது தந்தை எஸ்ஏசி. நடிகர் விஜய் மாஸ் ஹீரோ ஆகி ரசிகர் மன்றங்கள் பெருகிய சமயத்தில் விஜயகாந்த் பாணியில் நற்பணிகளை முடுக்கிவிட்டார் எஸ்ஏசி. மாவட்டந்தோறும் நலத்திட்ட உதவிகளை செய்து வைப்பது, ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் செய்து வைப்பது என்று அரசியலுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. ஆனால் விஜயகாந்த், ரஜினிகாந்துக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத்தை அப்போது விஜய்க்கு ஊடகங்கள் கொடுக்கவில்லை.
காரணம் ஊடகங்களை சந்தித்து ஐந்து நிமிடம் கூட சேர்ந்தது போல் விஜயால் பேச முடியாது. இதுவரை நடிகர் விஜய் பிரஸ் மீட் என்று எதையும் வைத்தது இல்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செய்தியாளர்களை சந்திக்க அழைப்பு விடுத்தார் விஜய், ஆனால் செய்தியாளர்களுக்கு ஒரே ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது.
அது என்ன என்றால் விஜயிடம் கேள்வி எதுவும் கேட்க கூடாது என்பது தான். இப்படி விநோதமான அரசியல் பாதையில் பயணிக்கும் காரணத்தினால் பல்வேறு சிக்கல்களிலும் விஜய் சிக்க ஆரம்பித்தார். 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் விஜய் நலத்திட்ட பதவிகளை தீவிரமாக செய்து வந்தார்.
இதனை ஸ்டாலின் தரப்பு விரும்பாமல் விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் விரட்டி அடித்தது. இதனால் தான் ௨௦௧௧ தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் வெளிப்படையாக பிரச்சாரம் செய்தனர். ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு விஜய் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆக முடியாத நிலை உருவானது. இந்த நிலையில் அப்போதைய பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி கோவை வந்த போது அவரை சந்தித்து 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தார் விஜய். அதற்கு முன்பாக அன்னா ஹசாரே போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
இப்படி சமயத்திற்கு தகுந்தாற்போல் அரசியல் நிலைப்பாடு எடுப்பது விஜயின் வாடிக்கை. இதன் பின்னணியில் அவரது தந்தை இருப்பார். அந்த வகையில் தற்போது தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திடீரென விஜய் ரசிகர்கள் ஆங்காங்கே போஸ்டர் அடிக்க ஆரம்பித்துள்ளனர். அனைத்து போஸ்டர்களிலும் சொல்லி வைத்தது போல் விஜயை எம்ஜிஆருடன் ஒப்பிட்டு போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டன. இது அதிமுக தரப்பை எரிச்சல் அடைய வைத்தது. விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் பதிலடி வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் சமயத்தில் விஜயுடன் மோதி அவருக்கு விளம்பரம் செய்ய வேண்டாம் என்று அதிமுகவினர் ஒதுங்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் மதுரையில் நடிகர் விஜய் ரசிகர்கள் பிரமாண்டமாக போஸ்டர்கள் அடித்துள்ளனர். அதில் ரஜினி, மோகன்லால் உள்ளிட்ட 4 நடிகர்களின் புகைப்படங்களை வெளியிட்டு நான்கு மாநிலங்களில் நீங்கள் வேண்டுமானால் சூப்பர் ஸ்டார் ஆனால் அந்த நான்கு மாநிலங்களிலும் வாத்தியார் எங்கள் அண்ணா தான் என்று குறிப்பிட்டிருந்தனர். இது ரஜினி ரசிகர்களை கொதிக்க வைத்துள்ளது. எவ்வளவு துணிச்சல் இருந்தால் ரஜினியின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை விஜயுடன் ஒப்பிட்டிருப்பார்கள் என்று அவர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.
இப்படி விஜய் ரசிகர்கள் திடீரென போஸ்டர் அரசியல் செய்ய காரணம் என்ன என்று விசாரித்த போது தகவல்கள் சில கிடைத்தன. அதன்படி, விஜய் ரசிகர்கள் இது போன்ற போஸ்டர்கள் அடிக்க வேண்டும் என்றால் தலைமையின் அனுமதியை பெற வேண்டும். மேலும் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இருந்தால் தலைமைக்கு ஒரு சாம்பிள் அனுப்பி ஓகே பெற்ற ஒட்ட வேண்டும். அப்படி இருக்கையில் விஜய் ரசிகர்கள் இது போன்ற போஸ்டர்களை தலைமையின் அனுமதி இன்றி ஒட்டியிருக்க முடியாது. அப்படி என்றால் எதற்காக இது போன்ற போஸ்டர்களை விஜய் ரசிகர் மன்ற தலைமை அனுமதிக்கிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ள நிலையில் விஜய் மற்றும் அவரது தந்தை திமுக ஆதரவு நிலைப்பாடு எடுக்க உள்ளதாக கூறுகிறார்கள். இதற்காக திமுக மேலிடத்துடன் சில உடன்பாடுகள் செய்துள்ளதாகவும் சொல்கிறார்கள். அந்த ரகசிய உடன்பாட்டின்படி விஜய் நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால் திமுகவிற்கு ஆதரவாக சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ரஜினி எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம் என்கிற நிலையில் தான் அவரது ரசிகர்களுக்கு எதிராக விஜய் ரசிகர்களை எஸ்ஏசி தற்போது முதலே தூண்டி விட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.