
மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் ‘இது தளபதி ரசிகன் இல்லம். அதிமுகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம்’ என்கிற போஸ்டர் அதிமுக வட்டாரத்தை அதிர வைத்து வருகிறது.
வரும் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் அரசியல் கட்சித் தலைவர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சர்கார் பட விவகாரத்தின் போது அதிமுகவினர் மேற்கொண்ட போராட்டங்களை முன்வைத்து, அதிமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் விருதுநகர் மாவட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிரணித் தலைவி ஜெகதீஸ்வரி. இதுகுறித்து வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் ஜெகதீஸ்வரி, சர்கார் பட ரிலீஸ் சமயத்தில் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள்.
நாங்கள் சொந்த செலவில் வைத்திருந்த பேனர்களை கிழித்தார்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமால் எங்களை கண்ணீர் விட வைத்தார்கள். அச்சம்பவம் ஒவ்வொரு ரசிகர்களின் மனதிலும் மறையவில்லை. இதற்காகத்தான் எங்களிடம் ஓட்டுக் கேட்டு வரவேண்டாம் என்று நோட்டீஸ் அடித்து வலைதளங்களில் பதிவிட்டேன்.
விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் யாரும் எங்களை இப்படி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. அதிமுகவினர் செய்த போராட்டத்தால் விஜய் ரசிகர்களுக்கு அக்கட்சி மீது வெறுப்பு வந்துவிட்டது. இப்போதுதான் எங்களது எதிர்ப்பை பதிவு செய்ய முடியும்” என்று கூறியுள்ளார். இதுபோன்ற போஸ்டர்களை சமூகவலைதளங்களிலும் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.