'கூட்டணிக்குள் உள்குத்து..' ஸ்டாலின் இப்படி செய்வாருன்னு எதிர்பார்க்கல.. விசிக - திமுக 'திடீர்' மோதல்

By Raghupati RFirst Published Feb 27, 2022, 10:51 AM IST
Highlights

ஆன்மீகப் பரப்புரையை அரசே முன்னெடுப்பது திராவிட கருத்தியலுக்கு எதிரானது என்று திமுக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருக்கிறது திமுக கூட்டணிக்குள் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, ‘ இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரை  இல்லாத அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில், பொற்காலம் என போற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. திருக்கோயிலுக்கு சொந்தமான  நிலங்கள் மீட்பு, திருக்குடமுழுக்கு, அறநிலையத்துறை சார்பில் பள்ளிகள், கல்லூரிகள், திருக்கோயில் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு என பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது சிவராத்திரியை முன்னிட்டு,  சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் வகையிலல்  அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 2-ஆம் தேதி காலை 6 மணி வரை 12 மணி நேர மாகா சிவராத்திரி விழா 100-க்கும் மேற்பட்ட ஆன்மீக கலைஞர்களைக் கொண்டு, சிறப்பாக நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், ஆன்மீகம் தொடர்பான மங்கள இசை, சொற்பொழிவுகள், நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பக்தி பாடல்கள், கிராமிய இசை  நடைபெறவுள்ளன. ஆன்மீகம் தொடர்பான 10 விற்பனையகங்கள் அமைக்கபடவுள்ளது. அதில்,  பழநி பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்களின் பிரசாதங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. முக்கிய திருக்கோயில்களின் தலபுராணம், தலவரலாறு, திருக்கோயில்களின் வழிகாட்டி நூல்கள் போன்ற அரிய வகை நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

மகா சிவராத்திரி விழா  நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை மாடவீதிகளில் நிறுத்தி கொள்ளலாம். நிகழ்ச்சி நடைபெறும் நேரங்களில் திருக்கோயில் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி அரங்கில் 3000 நபர்கள் அமர்வதற்கு இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் சிவாலயங்களில் மகா சிவராத்திரி அன்று ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றதோ அதை விட செம்மையாகவும், மகா சிவராத்திரி ஏன் நடத்தப்படுகின்றது என பக்தர்களுக்கு தெரிந்துக் கொள்ளும் வகையில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்தவும் திருக்கோயில் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சிவாலயங்கள் அனைத்தும் மகா சிவராத்திரி அன்று வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்’ என்று கூறினார்.

விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு இது தொடர்பாக கூறும்போது, ‘ஆன்மீகப் பரப்புரையை அரசே முன்னெடுப்பது திராவிட கருத்தியலுக்கு எதிரானது. தமிழக முதல்வர் இச்செயல் திட்டத்துக்கு அனுமதி தரக் கூடாது’ என கூறியுள்ளார். திமுக கூட்டணிக்குள் இருக்கும் விசிக கட்சி திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பது, கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!