டெல்டாவில் அறிவிக்கப்பட்ட 3 நிலக்கரி சுரங்கத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது முதலமைச்சருக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்திலுள்ள சேத்தியாதோப்பு கிழக்கு, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்திலுள்ள மைக்கேல்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்திலுள்ள வடசேரி ஆகிய 3 பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டப்பேரவையில் பேசிய ஸ்டாலின் முதலமைச்சராக மட்டுமல்ல, டெல்டாக்காரனாகவும் சொல்கிறேன், காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு நிச்சயம் அனுமதியளிக்காது என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை நேரில் சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் ரத்து செய்ய வேண்டும் மனு கோரிக்கை வைத்தார். இந்நிலையில், டெல்டாவில் அறிவிக்கப்பட்ட 3 நிலக்கரி சுரங்கத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் ஒன்றிய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது.இது டெல்டாக்காரராக முதலமைச்சர் அவர்களுக்கும்-தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி. https://t.co/NwGZ3OK5sG
— Udhay (@Udhaystalin)
இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் ஒன்றிய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது. இது டெல்டாக்காரராக முதலமைச்சர் அவர்களுக்கும்-தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி. #விவசாயம்காப்போம் என பதிவிட்டுள்ளார்.