சாதி ரீதியாக கேள்வியின் பின்னணியில் துணைவேந்தர் ஜெகநாதன்? அம்பலப்படுத்தும் வேல்முருகன்..!

By vinoth kumar  |  First Published Jul 16, 2022, 6:43 AM IST

சாதி ஒழிக்க போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


ஆர்.எஸ்.எஸ்-சின் அடிவருடியாக தொடர்ந்து செயல்பட்டு வரும்  பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வேல்முருகன் கூறியுள்ளார்.  

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவ தேர்வு வினாத்தாளில்  சாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. முதுகலை வரலாறு  இரண்டாமாண்டு தேர்வு வினாத்தாளில்,  நான்கு சாதிப் பெயர்களை குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் எது தாழ்த்தப்பட்ட சாதி எனக் கேள்வி இடம்பெற்றுள்ளது. சாதி ஒழிக்க போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- சாதி வன்மத்துடன் கேள்வித்தாள் தயாரித்த ஒருத்தவனையும் விடாதீங்க.. கண்சிவக்கும் ராமதாஸ்.!

வினாத்தாள் பிற பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டதாக துணைவேந்தர் ஜெகநாதன் விளக்கம் அளித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது, வினாத்தாளில்  சாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டிருக்கும் பின்னணியில் துணைவேந்தர் ஜெகநாதன் இருப்பதாக சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஏனென்றால்,  கடந்த சில நாட்களுக்கு முன்பு, துணைவேந்தர் ஜெகநாதனின் வெளியிட்டிருந்த அறிவிப்பில், பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் பயிலும் மாணவர்கள் பல்வேறு அமைப்புகள் பெயரில் அரசியல் சார்ந்த பரப்புரைகளை, விவாதங்களை நடத்த தடை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் அரசியல் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த அறிவிப்பை திரும்பப் பெறப்பட்டது.

மோடி அரசு தனது நேரடி கட்டுப்பாட்டில் வராத மாநிலங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நபர்களை ஆளுநர்களாக நியமித்து வருகிறார்கள். அந்த அடிப்படையில்தான் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட ஆளுநர்கள் இன்று பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு சக்திகளை துணைவேந்தர்களாக நியமித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர் தான் இந்த பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன்.

இதையும் படிங்க;- எது தாழ்த்தப்பட்ட சாதி..? அதிர்ச்சியை ஏற்படுத்திய கேள்வி.. வருத்தம் தெரிவித்த பெரியார் பல்கலை.

துணைவேந்தராக அமர்த்தப்பட்ட பிறகு வேதசக்தி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-ன் புராண குப்பைகளையும் பிற்போக்கு குப்பைகளையும் பரப்புவதற்கு ஒரு கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தார். அந்தக் கருத்தரங்கம் கலைஞர் ஆய்வு மையத்துடன் இணைந்து நடத்துவதாக இருந்தது. இது பல்வேறு தரப்பினராலும் கண்டிக்கப்பட்டது. அத்துடன் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இப்போது மீண்டும் துணைவேந்தர் தனது பாசிச கரங்களை நீட்டி உள்ளார். அதனால் தான், முதுகலை வரலாறு இரண்டாம் ஆண்டு தேர்வு வினாத்தாளில் சாதி ரீதியாக கேள்வி  கேட்கப்பட்டிருக்கும் பின்னணியில், துணைவேந்தர் ஜெகநாதன் இருக்கலாம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது. 

பெரியார் மீதான காழ்ப்புணர்ச்சியின்  காரணமாகவும் அவரை இழிவு படுத்தும் விதமாகவும்,  பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழக வினாத்தாளில்  சாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம் சாட்டுகிறது. எனவே இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நேரடியாக தலையிட்டு, குறிப்பிட்ட வினாத்தாளை தயாரித்த பேராசிரியர்கள் யார்? இப்படி அர்த்தமற்ற கேள்வியை எழுப்ப கூறியது யார்?, அவர்களின் பின்புலம்  ஆகியவற்றைக் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ்-சின் அடிவருடியாக தொடர்ந்து செயல்பட்டு வரும்  துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- பெரியார் பல்கலைக் கழகத்தில் சாதி தொடர்பான கேள்வியா..? இது தான் சமூக நீதியா கொந்தளித்த அண்ணாமலை

click me!