அன்புமணிக்கு பெரும் தலைவலியாக மாறப்போகும் விஜிகே மணி.... என்ன செய்யப்போகிறது பாமக?

By sathish kFirst Published Dec 31, 2018, 10:42 AM IST
Highlights

’நான் இருந்தாலும் கெத்து, இறந்தாலும் கெத்து என்பதை ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவருக்கும் தெளிவாக நிரூபித்திருக்கிறார் காடுவெட்டி குரு. பா.ம.க. என்றாலே அது காடுவெட்டி குருதான் என்பதை இதோ உலகம் மீண்டும் ஒப்புக் கொண்டிருக்கிறது.’  

சமீபத்தில் மயிலாடுதுறையில்  மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவை விஜிகே மணியும், காடுவெட்டி குருவின் மகன் கனலரசனும் இணைந்து நடத்தியுள்ளனர். அதில்  பேசிய கனலரசன், ‘வரும் பிப்ரவரி 1-ம் தேதி என் அப்பா குருவின் பிறந்த நாளன்று உலகம் முழுவதும் உள்ள வன்னியர்கள் காடுவெட்டியில் ஒன்று சேர்ந்து அந்த விழாவை நடத்த இருக்கிறோம். அப்போது மாவீரனுக்கு  கோயில் கட்டுவதோடு, புதிய வன்னியர் சங்கமும் பிறக்கும்.’ என்று ஆவேசமாய் பேசியிருக்கிறார். 

இதைத் தொடர்ந்து பேசிய வழுவூர் வி.ஜி.கே.மணிகண்டன் ``காடுவெட்டியில் குரு குடும்பத்தினருக்கு பிரச்னை என்றவுடன் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன். உடனடியாக , மருத்துவர் ஐயா என்னை அழைத்து,' நல்ல எதிர்காலம் அமைத்து தருகிறேன், காடுவெட்டி பக்கம் போக வேண்டாம்' என்றார். சரியான மருத்துவ சிகிச்சை வழங்காமல்   குருவின் சாவுக்கு காரணமாக இருந்தது பாமக குரு குடும்பத்துக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என்பதால் கட்சியிலிருந்து நீக்கி விட்டார்கள். குருவின் கார், டிராக்டர் உட்பட அனைத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டுப் பத்திரம் உட்பட கையகப்படுத்தி குருவின் குடும்பத்தை அழிக்க இருக்கும் பா.ம.க. வை எதிர்த்து, வருகிற பிப்ரவரி 1-ம் தேதி காடுவெட்டி ஜெ.குரு பிறந்தநாளன்று, புதிய அமைப்பைத் தொடங்கி பா.ம.க-வுக்கு தக்க பாடம் புகட்டுவோம்" என்றார்.

இதற்கு முன்பு, பாமகவிலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன், பேராசிரியர் தீரன்,  பாமகவின் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த தலித் எழில்மலை, வேல்முருகன் போன்றோர் கருத்துவேறுபாடு காரணமாக வெவ்வேறு காலகட்டங்களில் வெளியேறினர். அவர்களில் வேல்முருகன் மட்டும் தனிக்கட்சி நடத்திவருகிறார்.  பாமகவிலிருந்து பெரும் தலைகள் வெளியேறியபோதும் காடுவெட்டி குருவை வைத்துக் கொண்டு ராமதாஸ் அத்தனை சவால்களையும் முறியடித்து இதுவரை பாமகவை கட்டிக்காத்து வழி நடத்தி வந்தார். ஆனால், இப்போது பாமாவிலிருந்து வெளியேற்றப்பட்ட காடுவெட்டி குருவின் உறவினரான விஜிகே மணி, பாமகவை இரண்டாக உடைக்கும் முயற்சியில் குதித்துள்ளார்.  இதற்கு பாமகவின் தூணாக விளங்கிய குருவின் மகன் கனல் அரசனை வைத்தே ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார்.

வன்னியர்சங்க தலைவராக இருந்த குருவை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த வன்னியர்களை தன்வசம் வைத்திருந்த, ராமதாஸ், ஆனால் இப்போது குருவிற்கு பக்கபலமாக இருந்த வன்னிய இளைஞர்களை மொத்தமாக வளைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். வன்னியர்கள் வாக்கு வங்கியை நம்பியே இதுவரை கூட்டணியும் தேர்தலையும் சந்தித்து வந்த பாமக இனி எப்படி சமாளிக்கப்போகிறது? பாமகவின் தலைவராக பதவியேற்க இருக்கும் அன்புமணிக்கு தலைவலியாக மாற இருக்கும் விஜிகே மணியை எப்படி எதிர்கொள்வார் என பாமகவினர் குழப்பத்தில் உள்ளனர்.

விஜிகே மணியின் விஸ்வரூபமும், காடுவெட்டி குரு மகனின் அரசியல் வருகையும் கண்டு மிரண்டுபோயுள்ளார்களாம் ராமதாஸும், அன்புமணியும். காரணம், வன்னியர்சங்கம் தான் பா.ம.க.வுக்கு அடித்தளமே. வன்னியர் சங்கத்தின் வாக்கு வங்கிதான் பா.ம.க.வின் வாக்கு வங்கியே. ஆக அந்த சங்கத்தில் பிளவு வருகிறதென்றால் அது பா.ம.க.வில் ஏற்படும் பிளவே!

click me!