
சிங்கத்தின் குகையில் சிங்கம்தான் இருக்க முடியும் எனவும் சிறுநரி இருக்க முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு டிடிவி தரப்பு ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள், நிறுவனங்களிலும் வருமான வரித்துறை நவம்பர் 9 முதல் 6 நாட்களுக்கு அதிரடி சோதனை நடத்தியது. அந்த சோதனையின் தொடர்ச்சியாக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதனிடையே சோதனைக்கு காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிதான் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், சிங்கம் வாழ்ந்த குகையில் சிறுநரிகள் புகுந்ததால்தான் பிரச்னை ஏற்பட்டது எனக் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சிங்கம்போல் வாழ்ந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் சிலர் அந்த இல்லத்திற்குள் சென்றதால்தான் வருமானவரிச் சோதனை நடைபெற்றதாகக் தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, சிங்கத்தின் குகையில் சிங்கம்தான் இருக்க முடியும் எனவும் சிறுநரி இருக்க முடியாது எனவும் பதில் அளித்தார்.
மேலும் சசிகலா குடும்பம் பற்றி பேச ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை எனவும் மக்கள் பார்வையில் அருவருக்கத்தக்க அமைச்சரவை அமைந்து விட்டது எனவும் தெரிவித்தார்.
சசிகலாவுடன் சம்பந்தம் இல்லை என எடப்பாடியால் சத்தியம் செய்ய முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.