
வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம், தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,
நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது.
அதில், டிசம்பர் 1 முதல் 10 ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல கார்த்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், வெளிநாடு சென்றால் டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்றும், டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் நாடு திரும்பாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்காக, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு
வாரியத்திடம் அனுமதி பெற்றதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதற்கு உடந்தையாக செயல்பட்டதாக, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ கடந்த மே மாதம் வழக்குப் பதிவு செய்தது. மேலும், அவர் வெளிநாடு
செல்வதை தடுப்பதற்காக, லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தனது மகனின் படிப்பிற்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க
வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தார்.
அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதிக்குள் வெளிநாடு சென்று திரும்புமாறும், நாடு திரும்பியதும்
நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆணை பிறப்பித்துள்ளது.