இளம் வயதில் எஸ்.பி.வேலுமணியின் நிலை..!கூரைவீடு... முன்னால் ஜெயலலிதா கட்-அவுட்.. நண்பரின் வீட்டை விற்றுக்கடன்.!

By Thiraviaraj RMFirst Published Aug 12, 2021, 12:28 PM IST
Highlights

புகழ், பணம் சம்பாதிக்க வேண்டுமானால் சினிமா அல்லது அரசியல் இரண்டு மட்டும் தான். சினிமா கைவிட்டுவிட்டது. அடுத்து அரசியல்தான் என முடிவுக்கு வந்தவர் அதிமுக ஆதரவாளராக மாறினார். 
 

சுகுணாபுரம் பழனிசாமி வேலுமணி... இன்று செய்திகளில் பரபரப்பாக பேசப்படும் பெயர் எஸ்.பி.வேலுமணி. 5 அக்டோபர் 1969 ல், குனியாமுத்தூர் அருகே  உள்ள சுகுணாபுரத்தில் பிறந்தவர். 

அப்பா பழனிசாமி சாதாரண மில் தொழிலாளி. அதே நேரத்தில் குனியமுத்தூர் நகராட்சி கவுன்சிலராகவும் வெற்றி பெற்றவர். மயிலாத்தாள் சத்துணவு அமைப்பாளர். எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் அன்பரசன். தம்பி செந்தில்குமார். சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் முதுகலை பட்டமும் ஆய்வியல் நிறைஞர் (MPhil) பட்ட மேற்படிப்பை முடித்துள்ளார். படித்து முடித்தவுடன் சினிமாவில் நுழைந்து பெரிய நட்சத்திரம் ஆக வேண்டும் என்கிற கனவில் சென்னைக்கு வண்டியேறினார். சென்னையில் தெருத்தெருவாக அழைந்து சினிமா வாய்ப்புத் தேடினார். சில படங்களில் துணை நடிகராகவும் தலைகாட்டியுள்ளார். பெரிய பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என ஏங்கினார். ஆனால் துக்கடா பாத்திரங்கள் கூட கிடைக்கவில்லை. மகனின் நிலை கண்டு தந்தை பழனிசாமி வருந்தினார்.

சென்னையில் வசிக்கும் சூழலும், சினிமா வாய்ப்பு கிடைக்காத விரக்தியும் அவரை சுகுணாபுரத்துக்கே அழைத்துச் சென்றது. சிறு சிறு வேலைகளை செய்து கொண்டிருந்தார். வித்யாதேவிக்கும், இவருக்கும் 11.03.1998-ல் திருமணம் நடைபெற்றது. எஸ்.பி.வேலுமணி-வித்யாதேவி தம்பதிக்கு விகாஷ் என்ற மகனும், சாரங்கி என்ற மகளும் உள்ளனர். அடுத்து தந்தை பழனிசாமி வழிகாட்டலின் பேரில் சிறிய அளவில் டெண்டர் எடுத்து பணிகளை செய்து வந்தார்.   எப்படியாவது முன்னேற வேண்டும். புகழ்பெற வேண்டும் என்கிற வேட்கை மட்டும் அவருக்குள் கொழுந்து விட்டுக் கொண்டிருந்தது. புகழ், பணம் சம்பாதிக்க வேண்டுமானால் சினிமா அல்லது அரசியல் இரண்டு மட்டும் தான். சினிமா கைவிட்டுவிட்டது. அடுத்து அரசியல்தான் என முடிவுக்கு வந்தவர் அதிமுக ஆதரவாளராக மாறினார். 

அப்போது ஜெயலலிதா கோவை வந்தார். எப்படியாவது செயலலிதாவின் கவனத்தை ஈர்த்துவிடவேண்டும் என திட்டம் போட்ட வேலுமணி, தான் இருந்துவந்த கிரிக்கெட் டீம் நண்பர்கள் 100 பேரை அழைத்து வந்து ஜெயலலிதாவின் படம் வெள்ளை நிற பனியன்களை அணிய வைத்து கவனம் ஈர்த்தார். அந்தப்பயணத்தில் யார் செய்த ஏற்பாடு என விசாரித்து சென்றுள்ளார் ஜெயலலிதா. சென்னை வந்த பின் வேலுமணியை விசாரித்து அவருக்கு பதவி கொடுக்க ஏற்பாடுகள் நடந்தது. அப்போது ஆரம்பித்தது எஸ்.பி.வேலுமணிக்கு ராஜயோகம். அடுத்து 2001 ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு குனியமுத்தூர் நகராட்சித் தலைவரானர்.

 

2006-ம் ஆண்டு பேரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராஜூ அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக எஸ்.பி.வேலுமணியே தலைமைக்கு ரகசியமாக போட்டுக் கொடுக்க, வாய்ப்பு ’மணி’க்கு கிட்டியது. மாற்று வேட்பாளராக  சசிகலாவின் உறவினர் ராவணன் மூலம் பேரூர் தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றியும் பெற்றார் வேலுமணி. 2006ல் வேலுமணிக்கு எம்எல்ஏ சீட் கிடைத்தது. அப்போது தனது சொந்த வீட்டை அடமானம் வைத்து ரூ.50 லட்சத்தை சந்திரசேகர், வேலுமணிக்கு வழங்கினார். அந்த பணத்தை செலவு செய்துதான் வேலுமணி எம்எல்ஏ ஆனார். உள்ளாட்சித்துறை அமைச்சரானதும், தனது நிழலாகவே வைத்துக் கொண்டார். இதனால்தான் வேலுமணியின் பினாமியாக அவர் செயல்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகின்றனர்.

தொகுதி மறுசீரமைப்பின் போது, பேரூர் தொகுதி நீக்கப்பட்டு அத்தொகுதி தொண்டாமுத்தூர் தொகுதியில் சேர்க்கப்பட்டபோது, 2011, 2016, 2021 என தொடர்ந்து மூன்று முறை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

2011ல் அவர் சிறப்பு திட்டங்கள் அமலாக்கம், வருவாய் மற்றும் சட்டத்துறை அமைச்சரானார். எந்த ராவணன் மூலம் எம்.எல்.ஏ சீட் கிடைத்ததோ, அதே ராவணன் மூலம் சில மாதங்களில் வேலுமணியின் அமைச்சர் பதவி, மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. மீண்டும் அதே ராவணன் மூலம் இழந்த பதவியை மீண்டும் பிடித்தார். அதுதான் எஸ்.பி.வேலுமணியின் ராஜட்தந்திரம்.

கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து களப்பணியாற்றும் எஸ்.பி.வேலுமணி, தொண்டர்களோடு தொண்டர்களாக பழகுவதால் அவரை தொண்டாமுத்தூரின் தொண்டர் என அதிமுகவினர் அன்போடு அழைக்கின்றனர். 2016-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தனித்தனி அணியாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஓரணியாக இணைய எஸ்.பி.வேலுமணி முக்கிய பங்காற்றியவர். உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் அதிமுகவின் வெற்றிக்காக பம்பரமாக களப்பணியாற்றுபவர்.  

2021 சட்டமன்ற தேர்தலில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளுக்கு எஸ்.பி.வேலுமணி பொறுப்பாளராக இருந்தார். கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை. அதேபோல 21 தொகுதிகளில் 17 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறச் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு, தனது பலத்தை நிரூபித்தார்.

click me!