சென்னை வீரர்களுக்கு ஏதாவது நடந்தால் நாங்க பொறுப்பல்ல.. வேல்முருகன் பகிரங்க மிரட்டல்

First Published Apr 9, 2018, 11:12 AM IST
Highlights
velmurugan warning csk players


காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவே ஐபிஎல் நடத்தப்படுகிறது. சென்னை அணி வீரர்கள் வெளியே செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. விவசாயிகள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பல தரப்பினரும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.

காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், போராட்டங்களும் வலுத்துள்ளன. இந்நிலையில், ஐபிஎல் 11வது சீசன் நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. சென்னை கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னைக்காகவும் தமிழர்களின் உரிமைக்காகவும் தமிழக மக்கள் ஒற்றுமையாக போராடி வரும் நிலையில், ஐபிஎல் போன்ற உற்சாக கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது. அதனால் சென்னையில் நடைபெற இருக்கும் போட்டியை மாற்ற வேண்டும்; இல்லையேல் மைதானத்தை முற்றுகையிடுவோம் என சில அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தெரிவித்து வருகின்றன.

ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என்ற எதிர்ப்பு குரல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், காவிரி விவகாரத்தில் தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவே ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது. அதையும் மீறி நடத்தினால், சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவோம்.

சென்னை அணியில் இருக்கும் தமிழக வீரர்களாவது தமிழர்களின் எண்ணத்தை புரிந்துகொள்ள வேண்டும். சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தப்படக்கூடாது. சென்னை அணி வீரர்கள் வெளியே செல்லும்போது அவர்களுக்கு ஏதாவது நேரிட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என பகிரங்கமாக எச்சரிக்கையும் விடுத்தார்.
 

click me!