மக்களவை தேர்தலில் டிடிவி தினகரன் அணியில் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக்கட்சி கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் டிடிவி தினகரன் அணியில் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக்கட்சி கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் யார் யாருடன் கூட்டணி வைத்து வெற்றி பெறலாம் என்ற பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதேபோல் தமிழகத்தை பொறுத்த அதிமுக தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைத்துள்ளது. எதிர்க்கட்சியாக உள்ள திமுக கூட்டணியை இறுதி செய்துவிட்டது. கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் போக திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேசமயம் அதிமுகவும் கிட்டத்தட்ட ஓரளவுக்கு கூட்டணியை முடித்துவிட்டது. ஆனால் தேமுதிக, அதிமுகவில் இணையுமா? இணையாதா? என்பதுதான் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் தினகரன் தலைமையிலான 3-வது அணி உருவாகியுள்ளது. ஏற்கனவே தினகரன் தலைமையில் எஸ்டிபிஐ கட்சி கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே டிடிவி தினகரனின் அமமுகவுடன் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக்கட்சி கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாமக நிற்கும் 7 தொகுதிகளுக்கு பதிலடி கொடுக்க சரியானவர் வேல்முருகன் என்பதால் அவரை கூட்டணிக்கு தினகரன் கொண்டுவந்துள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது. அதேபோல் திமுகவால் கழட்டிவிடப்பட்ட மனிதநேய மக்கள் கட்சியும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் தமிழகம் அரசியல் களம் சூடிபிடிக்க தொடங்கி உள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக தெரிவித்திருந்தார். கூட்டணிக்கு 2 தொகுதிகள் போக 38 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் எனவும் கூறிய அவர், இனி கூட்டணிக்கு வரும் கட்சிகளின் ஆதரவை ஏற்றுக்கொள்வோமே தவிர, அவர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமமுகவுடன் கூட்டணியில் சேர உள்ளது.