
ஆர்.எஸ்.எஸ்- சின் ஆதரவாளர் ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு துணைபோகும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முது அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், எண்ணிக்கையின் அடிப்படையில் 30 மாணவர்கள் சேர்க்கப்படும் என்றும் வரும் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது சரி தான். ஆனால், மாணவர்கள் சேர்க்கையில், ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைபிடிக்கப்படும் என்றும், 10 விழுக்காடு இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது கண்டனத்துக்குரியது.
இதுபோன்று, முதுநிலைப் படிப்பில் 10 விழுக்காடு உயர்வகுப்பு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் என்பது தமிழ்நாடு அரசின் நிதியால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை கொண்டுள்ளது என்றும் ஒன்றிய அரசு சில படிப்புகளுக்கு நிதி உதவி தருகிறது என்பதற்காகவே அதன் இட ஒதுக்கீடு கொள்கையை தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்த முடியாது என்றும் தெரிவித்திருந்தது.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் வழக்கமாக நடைமுறையில் இருக்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடே தொடரும் என நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒன்றிய அரசின் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த உத்தரவானது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும் பொருந்தும். இந்த நீதிமன்ற உத்தரவை கூட மதிக்காமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர், ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைபிடிக்கப்படும் என்றும், 10 விழுக்காடு இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நபர்களை துணைவேந்தராக நியமித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உத்தரவின் பேரில், ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைபிடிப்பு, 10 விழுக்காடு இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்குதல் போன்றவற்றை துணைவேந்தர் செயல்படுத்துவதாக தோன்றுகிறது. எனவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, ஆர்.எஸ்.எஸ்- சின் ஆதரவாளர் ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு துணைபோகும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முது அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பில், ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை, 10 விழுக்காடு இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்குதல் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.