நேர்மையான தலைவரிடம் கட்சியை ஒப்படையுங்கள்... காங்கிரஸ் மூத்த தலைவர் திடீர் குண்டு!

By Asianet TamilFirst Published Jun 8, 2019, 10:14 PM IST
Highlights

ராகுல் காந்தி பதவி விலகியதை எப்படியும்  திரும்ப பெற வைக்க வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் படாதாபாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் வீரப்பமொய்லியின் இக்கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காங்கிரஸ் கட்சியை நேர்மையான தலைவர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.
 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் இந்தப் படுதோல்வி கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. இதனால், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவருடைய ராஜினாமாவை திரும்ப பெற காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்திவருகிறார்கள். ஆனால், ராகுல் காந்தி பதவியிலிருந்து விலகுவதில் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் வீரப்பமொய்லி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “கட்சி பொறுப்பை நேர்மையான தலைவர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர், “பல்வேறு மாநிலங்களில் கட்சிக்குள் கோஸ்டி பூசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், கட்சியில் ஒழுங்கின்மை அதிகரித்துள்ளது. தற்போதுவரை காங்கிரஸ் தலைவராக ராகுல் நீடித்துவருகிறார். ராகுல் தற்போதுவரை தலைவராக நீடிக்கும்பட்சத்தில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள ஒழுங்கின்மையை கடுமையாக ஒடுக்க வேண்டும்.

 
ஒருவேளை ராகுல் தலைவர் பதவியிலிருந்து உறுதியாக விலகுவதாக இருந்தால், கட்சியை மறுசீரமைப்பு செய்துவிட்டு அவர் செல்ல வேண்டும். ஏனெனில் அவர் ஒரு உறுதியான தலைவரும்கூட. தலைவர் பதவியைவிட்டு ராகுல் விலகுவதாக இருந்தால் நேர்மையான, சரியான தலைவரிடம் கட்சியின் தலைமையை ஒப்படைக்கவேண்டும்.'' என்று வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பதவி விலகியதை எப்படியும்  திரும்ப பெற வைக்க வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் படாதாபாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் வீரப்பமொய்லியின் இக்கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!