
சேலத்தில் வரும் ஆகஸ்டு 27 இல் நடக்க இருக்கும் திராவிடர் கழக மாநாட்டில் குடும்பம் குடும்பங்களாகக் கூடுவோம், திராவிடப் பள்ளுப் பாடுவோம் என வீரமணி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சேலத்தில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக பவள விழா - 75 ஆம் ஆண்டு மாநாடு - மிகச் சிறப்புடன் வரலாறு படைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் தடபுடலாக நடை பெறுவது அறிய எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறோம்.
கழக உறுப்பினர்கள் சேர்க்கை முதல் கட்டப் பணி என்ற கடமையுணர்வுடன் கூடிய கழகப் பணிகளை மிகுந்த கவலையுடனும், பொறுப்புடனும் நடத்திவருவதானது - உற்சாக வெள்ளம் கழகக் குடும்பத்தினரிடம் கொள்கை உறவுகளிடமும் கரைபுரண்டு ஓடுகிறது என்பதைக் காட்டுவதாக உள்ளது!
சேலம் மாநாட்டு வரவேற்புக் குழுவினரும், நாமக்கல், சேலம், ஆத்தூர், ஈரோடு, மேட்டூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருப்பத்தூர், வேலூர், ஓசூர் கழக மாவட்டத் தோழர்களும் மிகுந்த எழுச்சியுடன் விளம்பரங்கள், தெரு முனைப் பிரச்சாரக் கூட்டங்கள், மாநாட்டு நன்கொடை வசூல்களையும், தஞ்சை, சென்னை மண்டலத் தோழர்களும், திருவாரூர், நாகை போன்ற மாவட்டத் தோழர் களும், தென்மாவட்டங்கள்- குமரிமுனைவரை அனைவரும் குடும்பம் குடும்பமாய் திரளு வோம்; ‘‘கொட்டும் மழையானாலும், கொளுத் தும் வெயிலானாலும், குடிசெய்வார்க்கில்லை பருவம்'' என்பது போல உழைப்புத் தேனீக்களாக, கருப்பு மெழுகுவர்த்திகளாக சுடர் விட்டு சுயமரியாதை பரப்பும் சொக்கத்தங் கங்களாக தகத்தகாய ஒளியுடன் ஜொலிக் கின்றனர்! கடுமையாக உழைக்கின்றனர்.
பிரச்சாரம்! பிரச்சாரம்! தெருமுனை, கிராமம், நகரம் எங்கணும்! புத்தெழுச்சியுடன் இளைஞரணி, மகளிரணி இருபால் தோழர்கள் கடைவீதி வசூல் பிரச்சாரத்தினை அடைமழையென சேலத்திலும், சுற்றுவட்ட மாவட்டங்களிலும் மாநாடு முடியும்வரை தொய்வின்றி நடத்திடவேண்டும்!
கார்ப்பரேட்டுகளின் உதவியால் நடை பெறுவதல்ல நமது கழக மாநாடுகள்! கழகத்தின் கடைக்கோடி திராவிடர்கள் நடத்தும் கழகம் - கையில் காசில்லாவிட்டாலும், மனதில் மாசில்லாத மானமறவர்களின் நன்றி பாராட் டாத நற்பண்பாளர்களான நாணயமிக்க நட் புறவுகளால் நடத்தப்படும் மாநாடு நம்முடைய கழக மாநாடாகும்.
இன்று பட்டம், பதவி துறந்தோரும், அப்பதவிகளை ஒடுக்கப்பட்ட வெகுமக்கள் ஏற்க - ஜாதியற்ற, பெண்ணடிமையற்ற, பகுத் தறிவு சுயமரியாதையுள்ளோரை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து, அய்யா, அன்னையார், அழகிரி, அண்ணா, கலைஞர் விரும்பிய சுயமரியாதை உலகு படைக்கத் திட்டமிடும் மாநாடு!
திராவிடப் பள்ளுப் பாடுவோம் வாரீர்! குடும்பம் குடும்பமாகக் கூடுவோமே - திராவிடப் பள்ளுப் பாடுவோமே! இமயமென எதிர்ப்பையும் இமை கொட்டாது எதிர்த்து ‘சமத்துவ, சம வாய்ப்பு, சமுதாயம் அமைப்போம் வாரீர்! வாரீர்!! வாரீர்!!! என கூவி கூவி அழைத்துள்ளார்.