
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் நடவடிக்கை துரதிருஷ்டவசமானது என்றும், தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தங்களது நிறுவனம் பெரும் பங்களித்துள்ளதாகவும் ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100 நாட்களுக்கு மேலாக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து ஆலையை மூட வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு தள்ளப்பட்டது. திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியிறுத்தின. இதையடுத்து நேற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர்
இந்நிலையில் தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் நடவடிக்கை துரதிருஷ்டவசமானது என்று வேதாந்தா குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசாணையை ஆய்வு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று வேதாந்தா குழுமம் தெரிவித்துள்ளது.
22 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலையை வெளிப்படைத்தன்மையுடன் இயக்கி உள்ளதாகவும் தூத்துக்குடி மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதாகவும் வேதாந்தா குழுமம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.