இதுல ஏதோ உள்ளடி இருக்குமான்னு சந்தேகமா இருக்கு... பகீர் கிளப்பும் திருமாவளவன்

By sathish kFirst Published Jan 1, 2019, 9:21 PM IST
Highlights

திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கும் தடை எதுவுமில்லை ஆனால், திருவாரூரில் மட்டும் தேர்தல் நடத்துவதில் உள்நோக்கம் இருக்கிறதோ என்று ஐயப்படுவதாகவும்   திருமாவளவன்  தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் மறைவால் காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதிக்கு, வரும் 28ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 20 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது ஏன்  என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து, விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இருபது தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் திருவாரூருக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது இந்தியத் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் துணை அமைப்பாக மாறிவிட்டதோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

“ஆறு மாதங்களுக்கு மேல் ஒரு சட்டப் பேரவைத் தொகுதி காலியாக இருக்கக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. அதற்கு மாறாக 18 தொகுதிகள் 2017 செப்டம்பர் மாதம் அந்த எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து காலியாக இருக்கின்றன. அவற்றுக்குத் தேர்தல் நடத்துவதற்குத் தடை எதுவும் இல்லை. அதுபோலவே திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கும் தடை எதுவுமில்லை” என்று சுட்டிக்காட்டியுள்ள திருமாவளவன் திருவாரூரில் மட்டும் தேர்தல் நடத்துவதில் உள்நோக்கம் இருக்கிறதோ என்று ஐயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகிற கட்சிகளின் தலையீடு இல்லாமல் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்திருக்க முடியாது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடந்த அனைத்து முறைகேடுகளையும் தேர்தல் ஆணையம் எப்படி கண்டும் காணாமல் இருந்ததோ அப்படி இங்கும் முறைகேடுகளை அனுமதிக்கப்போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.திருவாரூர் இடைத் தேர்தலோடு ஏனைய 19 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை அறிவிக்கவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

click me!