40 தொகுதிகளில் தனித்து போட்டி? விசிக பெயரில் உலா வரும் வாட்ஸ்அப் செய்தி!

By Asianet TamilFirst Published Feb 28, 2019, 5:44 PM IST
Highlights

திமுகவில் தொகுதி உடன்பாடு தாமதமாகிவரும் நிலையில், 40  தொகுதிகளிலும் தனித்து களம் காண்போம் என்ற விடுதலை சிறுத்தைகள் பெயரில் உலா வரும் வாட்ஸ் அப் செய்தியால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
 

திமுகவில் தொகுதி உடன்பாடு தாமதமாகிவரும் நிலையில், 40  தொகுதிகளிலும் தனித்து களம் காண்போம் என்ற விடுதலை சிறுத்தைகள் பெயரில் உலா வரும் வாட்ஸ் அப் செய்தியால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இ.யூ.மு.லீக், கொமதேக ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடிந்துவிட்டது. மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்ட நிலையில், தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் தேமுதிகவின் கூட்டணிக்காக திமுக காத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், விசிக பெயரில் ஒரு வாட்ஸ்அப் செய்தி வேகமாகப் பரவிவருகிறது. கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் அந்த வாட்ஸ்அப்பில் தகவல்கள் உள்ளன.

அந்த வாட்ஸ்அப் செய்தி இதுதான்:

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு... தலைவரின் கட்டளைக்காக காத்திருக்கிறோம்.... இந்திய அளவில் மதச்சார்பற்ற கூட்டணி ராகுல் தலைமையில் உருவாக்க தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் பயணிக்க அணியை கட்டமைத்ததில் திருமாவின் பங்கு உச்சம். இதை யாரும் மறுக்க முடியாது... இது ஒரு புறம் இருக்க தமிழ் நாட்டில் திமுகவின் நிலைப்பாடு சிறுத்தைகளை ரொம்ப சோதிக்க வைக்கிறது...

பாமக வரும் வரை காத்திருக்க அவர்கள் எதிரணியில் போனதும் கூட்டணி பேச்சுக்கு அழைப்பு... தற்போது விஜயகாந்த் வரும் வரை தொகுதி அறிவிக்க காலதாமதம்... நான் ஒன்று கேட்கிறேன் தமிழ்நாட்டில் பாமகவைகூட விட்டு விடுகிறேன். ஒரு வாதத்திற்கு காங்கிரஸுக்கு 10 மற்றும் பாஜகவிற்கு 5 இந்த கட்சிகளை விடவா விசிகவுக்கு தமிழ் நாட்டில் ஓட்டு இல்லை... அண்ணன் ஆணை இட்டால் தமிழகம் முழுவதும் சிறுத்தைகளின் வாக்கு வங்கியை இந்த முறை தனித்து நின்று நம் பலத்தை காட்ட காத்திருக்கிறோம்...

செவி வழி செய்தியாக தேமுதிக திமுக கூட்டணிக்கு வந்தால் விசிகவுக்கு ஒரு தொகுதி. அதுவும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டுமாம். ஒரு ம.... தேவை இல்லை... என் அண்ணன் சுயமரியாதையே எங்களுக்கு முக்கியம்... அதனால் சிறுத்தைகள் அனைத்துக்கு தயாராக இருங்கள். 40 தொகுதிகளிளும் களமாட நம் வாக்கை நாடு கவனிக்க மாற்று கட்சியில் உள்ள தலித் வாக்காளர்கள் தன் வருங்கால சந்ததியினர் கவுரவமாக வாழ நம்மிடம் கூட்டணி பேச, நம் அலுவலத்துக்கு வர இந்த வாய்ப்பை பயன்படுத்துவோம்...

இந்த ஒரு முறை விசிகவுக்கு ஓட்டு போடுங்கள் நம் ஓட்டு சதவீதத்தை எதிரிகள் தெரிந்து கொள்ள... புரட்சியாளர் அம்பேத்கர் அடுத்து நூறாண்டு கழித்து திருமாவளவன் கிடைத்திருக்கிறார். இவரை விட்டால் தமிழகத்தில் அரசியல் அதிகாரம் நம் மக்களுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை... தியாகத் தலைவா.. உன் கட்டளைக்கு கட்டுப்படுவோம். உன் முடிவுக்காக காத்திருக்கிறோம். தோழமைக்கு சொல்கிறோம் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு...

இவ்வாறு அந்த வாட்ஸ்அப் செய்தியில் உள்ளது. இந்த வாட்ஸ் அப் செய்தியின் உண்மை தன்மை பற்றி விசிக வட்டாரங்களில் விசாரித்தபோது, “கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்ட சதி நடக்கிறது. இந்த வாட்ஸ் அப் செய்தி உண்மை இல்லை” என்று தெரிவித்தன.
 

click me!