ஒவ்வொரு புலம்பெயர் தொழிலாளாருக்கும் பத்தாயிரம் ரூபாய் கொடுங்க... விடாமல் வலியுறுத்தும் திருமாவளவன்!

By Asianet TamilFirst Published Jun 9, 2020, 9:36 PM IST
Highlights

புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரையும் 15 நாட்களுக்குள் சொந்த ஊருக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்; இதற்காக சிறப்பு ரயில்களை விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆணைகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை உடனடியாகத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
 

பிற மாநிலங்களில் வேலை செய்து சொந்த ஊருக்குத் திரும்பி வரும் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினையைத் தாமே முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், இன்று முக்கியமான உத்தரவுகளை மத்திய மாநில அரசுகளுக்குப் பிறப்பித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரையும் 15 நாட்களுக்குள் சொந்த ஊருக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்; இதற்காக சிறப்பு ரயில்களை விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆணைகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை உடனடியாகத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
பிற மாநிலங்களில் வேலை செய்து சொந்த ஊருக்குத் திரும்பி வரும் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்க வேண்டும்; அவர்களுக்கு இங்கேயே வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளில் அவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று விசிக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதுதொடர்பாக தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் உத்தரவாகப் பிறப்பித்து இருக்கும் நிலையில் இனிமேலாவது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுப்புச் செய்ய வேண்டும், அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அவர்களுக்குத் தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளித்து இங்கேயே பணி அமர்த்தம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களுக்கு வேலைதேடிச் செல்வதைத் தடுக்கவேண்டுமெனில் இங்குள்ள சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள், கட்டுமான வேலைகள், உணவகங்கள் முதலானவற்றில் பணி அமர்த்தம் செய்யும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கவேண்டும். அதற்காக தமிழக அரசு ஆணை ஒன்றை வெளியிடவேண்டும்” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

click me!