’சத்துணவு மையங்களை மூடினால் இரண்டு லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்’- திருமாவளவன்

By vinoth kumarFirst Published Dec 27, 2018, 5:48 PM IST
Highlights

குழந்தைகளின் எண்ணிக்கை 25க்கும் குறைவாக இருக்கும் மையங்களையும் அருகருகே இருக்கும் மையங்களையும் மூடப்போவதாக தெரியவந்துள்ளது. அதுபற்றி விளக்கமளித்துள்ள அதிகாரிகள் அரசாங்கத்தின் நோக்கம் மையங்களை மூடுவது அல்ல , அவற்றை ஒருங்கிணைப்பது மட்டுமே என்று கூறியுள்ளனர். 
 


’தமிழகத்தில் 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதாக அறிவித்திருப்பது ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிப்பதற்குச்சமம். இதுபற்றி தமிழக அரசு சிந்திப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது’ என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தற்போதுள்ள சத்துணவு மையங்களில் 8000 மையங்களை மூடுவதாக தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். 25000 பேருக்குமேல் வேலை வாய்ப்பை இழப்பார்கள். எனவே, இந்த முடிவை கைவிடுமாறு தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

குழந்தைகளின் எண்ணிக்கை 25க்கும் குறைவாக இருக்கும் மையங்களையும் அருகருகே இருக்கும் மையங்களையும் மூடப்போவதாக தெரியவந்துள்ளது. அதுபற்றி விளக்கமளித்துள்ள அதிகாரிகள் அரசாங்கத்தின் நோக்கம் மையங்களை மூடுவது அல்ல , அவற்றை ஒருங்கிணைப்பது மட்டுமே என்று கூறியுள்ளனர். 

ஆனால், இந்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல மையம் ஒன்றுக்கு 25 குழந்தைகள் சத்துணவு சாப்பிடுவதாக வைத்துக்கொண்டாலும் 8000 மையங்களை மூடும்போது இரண்டு லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். வேறு இடத்தில் சமைத்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இது தற்போதுள்ள சத்துணவு மைய ஊழியர்களின் வேலைப் பளுவை பலமடங்குக் கூட்டிவிடும். அதுமட்டுமன்றி குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு கிடைக்காத நிலை ஏற்படும். 

தற்போது சத்துணவு துறையில் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சமையலர், சமையல் உதவியாளர் பணிகளில் பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகங்களைச் சார்ந்த பெண்களே அதிகம் உள்ளனர். அரசின் இந்த முடிவால் அந்த வேலை வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படும்.

தமிழக அரசு ஆடம்பர செலவுகளைத் குறைத்தாலே இன்னும் சிறப்பாக நிதி மேலாண்மையைக் கையாள முடியும். ஆனால், அதை செய்வதற்கு பதிலாக ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிப்பதைப் பற்றி தமிழக அரசு சிந்திப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஏழை மக்களுக்கு எதிரான இந்த முடிவைத் தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!