
இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று செய்தியாளர்களிடையே பேசிய அவர்,, “ தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் சிறந்த முறையில் பல்வேறு அம்சங்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் சிறப்பான நிர்வாகத்தின் மூலம் வருவாய் பற்றாக்குறையை குறைத்து இருப்பது பாராட்டுக்குரியது என்றார். மேலும் உக்ரைனில் போரின் காரணமாக திரும்பி வந்த மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ படிப்பினை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.
உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா இரு தரப்பிடமும் பேச்சுவாரத்தை நடத்த வேண்டும் என்ற கூறிய அவர், பொருளாதாரத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு நிதி உதவி வழங்குவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக அந்நிய செலாவாணி குறைவால் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் அங்கு அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனிடையே விலைவாசி உயர்வை கண்டித்து, அதிபர் கோத்தபய ராஜபட்சே பதவி விலக வேண்டும் என்று கடந்த சில நாட்களாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
மொத்த ஜிடிபி மதிப்பு மைனஸ் 16.3 சதவிதம் என வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அந்நியச் செலாவணி குறைந்ததால், இலங்கை பணத்தின் மதிப்பும் வெகுவாக குறைந்துள்ளது. இதனிடையே பணத்தின் மதிப்பு குறைந்ததால், மளிகைப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதில் கூட பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுமட்டுமின்றி கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதாலும், மின்சாரத்திற்கு தேவையான நிலக்கரி வாங்குவதற்கு போதிய பணம் இல்லாததாலும் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கேஸ் சிலிண்டர் தடுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவு செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதை விட மேலாக, பொருளாதார நெருக்கடியால் தாள்கள் மற்றும் மை பற்றாக்குறையால் பள்ளிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்னதாக பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்திய அரசு இலங்கைக்கு ரூ 7,500 கோடி கடன் உதவி அளிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை.. தாள்கள் மற்றும் மை வாங்க காசுயில்லை.. தேர்வுகள் ரத்து..