அப்பட்டமான ஜனநாயக படுகொலை; சதித்திட்டம்... பாஜகவிற்கு எதிராக கொந்தளிக்கும் திருமா... ஏன் தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published May 11, 2021, 2:17 PM IST
Highlights

புதுச்சேரியில் பாஜக தலைமையிலான மதவாத ஆட்சி அமையாமல் தடுக்கத் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். 

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி இணைந்து போட்டியிட்டது. 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரிக்கு கடந்த மாதம் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 16 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், 9 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க 6 இடங்களிலும் வெற்றிபெற்ற நிலையில், 5 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க அனைத்து இடத்திலும் தோல்வியைத் தழுவியது. எதிரணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான தி.மு.க 6 இடங்களிலும்,  ஒரு தொகுதியில் போட்டியிட்ட வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்வியும் அடைந்தது. 

இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு மூன்று பேரையும் நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்து நேற்று இரவு உத்தரவிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களே பதவியேற்காத நிலையில், இரவோடு இரவாக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு மட்டும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரியில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சதி நடவடிக்கையில் பாஜக இறங்கியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் முன்பாகவே நியமன எம்.எல்.ஏக்களை நியமித்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சட்டத்துக்கு விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்ற முயலும் பாஜக-வின் சதியை முறியடிக்க திமுக உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலைக்கு வாங்கப்பட்ட நபர்களைத் தேர்தலில் நிறுத்தி 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது திரு.என்.ரங்கசாமி அவர்கள் முதல்வராகப் பரவியேற்றிருக்கிறார்.

ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ யாரும் இன்னும் பதவியேற்கவில்லை. இதனிடையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி தானே ஆட்சி அமைக்கும் சதி முயற்சியில் பாஜக இறங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதன் ஒரு அங்கமாக பாஜகவை சேர்ந்த மூவர் அவசரம் அவசரமாக நியமன உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.  இதன் மூலம் பாஜகவின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. முதல்வர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கூட்டணி கட.சியென்றும் பாராமல், என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களையே விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள திரு. என்.ரங்கசாமி அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது. மக்களுடைய தீர்ப்புக்கு எதிராக அங்கே ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜகவின் சதித் திட்டத்தை முறியடிக்க புதுச்சேரியில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

புதுவையில் 6 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உடனடியாக இதில் தலையிட வேண்டும். புதுச்சேரியில் பாஜக தலைமையிலான மதவாத ஆட்சி அமையாமல் தடுக்கத் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இத்துடன், நட்புக்குத் துரோகமிழைக்கும் பாஜகவை தோளில் சுமக்கும் என்.ஆர் காங்கிரஸ், இந்த நிலையிலாவது விழித்துக் கொள்ளவேண்டுமென்றும்; தமக்கு எதிராக நேரவிருக்கும் வரலாற்றுப் பழியைத் தவிர்த்துக்கொள்ள, தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமென்றும் சுட்டிக் காட்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

click me!