விசிக மீது தடியடி, கைது.. காவல்துறை எங்களை ஒரு கட்சியாகவே மதிக்கவில்லை.. கொதிக்கும் திருமாவளவன்.

By Ezhilarasan BabuFirst Published Sep 29, 2021, 11:50 AM IST
Highlights

2 நாளுக்கு பிறகு முதல்வரை இது தொடர்பாக சந்தித்து பேச உள்ளோம் .எனவே  நாளை , நாளை மறுநாள் சேலம் , மதுரையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் முதல்வரின் சந்திப்பிற்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

விடுதலைச் சிறுத்தைகள் மீதான வழக்கு , கைது சம்பவங்கள் கட்சியின் நன்மதிப்பை களங்கப்படுத்தும் முயற்சி என்றும் காவல்துறையினர் விடுதலைச் சிறுத்தைகளை ஒரு கட்சியாகவே ஏற்கவில்லை எனும் நிலையை உருவாக்கியுள்ளது என்றும் தொல்.திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவரும் , சென்னை மாநகர முன்னாள் மேயருமான மறைந்த மேயர்  சிவராஜ் அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு வள்ளலார் நகரில் அவரது திருவுருவச் சிலையின் கீழே  வைக்கப்பட்டிருந்த  திருவுருவப் படத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்பேத்கர் தனது தலைவராக ஏற்றவர்களில் ஒருவர் சிவராஜ். பட்டியலின மக்களுக்காக போராடியவர் சிவராஜ். மீனாம்பாள் சிவரஜ் இந்தியளவில் பூர்வ குடிகளின் உரிமைக்காக அம்பேத்கருடன் இணைந்து செயல்பட்டவர். சென்னை மேயராக அரும்பணியாற்றியவர் ஏற்கனவே இருந்த இடத்தில் சிவராஜ் சிலையை நிறுவ வேண்டும் . கோயம்பேடு நாற்சந்தியில் இருந்த அம்பேத்கர் சிலையை மீண்டும் அங்கு வைக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடி ஏற்றும் இடத்தில் தடியடி நடத்தப்பட்டுள்ளது. எங்கள் கட்சியினர் மீதான நன்மதிப்பை களங்கப்படுத்தும் முயற்சி இது, காவல்துறையினர் விடுதலை சிறுத்தைகளை ஒரு அரசியல் கட்சியாக ஏற்கவில்லை என்பது போன்ற  நிலையை உருவாக்குகிறது. 

2 நாளுக்கு பிறகு முதல்வரை இது தொடர்பாக சந்தித்து பேச உள்ளோம் .எனவே  நாளை , நாளை மறுநாள் சேலம் , மதுரையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் முதல்வரின் சந்திப்பிற்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் பலர் சாதிய எண்ணத்தில் செயல்படுகின்றனர் , முதல்வர்  கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சேர்ப்போம். வட மாநில சேர்ந்தோர் தென்னக ரயில்வேயில் அதிகமாக  பணியமர்த்தப்படுவது கண்டனத்திற்குரியது.தமிழகத்தை சேர்ந்தவர்களை புறக்கணித்து உள்நோக்கோடு இதை செய்வதாக தெரிகிறது. தமிழக அரசு தலையிட்டு ஓர வஞ்சனையை தடுக்க வேண்டும்.
 

click me!