பாஜகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவதால் எந்த பாதிப்பும் வராது என தெரிவித்துள்ள பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், பல்வேறு மாவட்டங்களில் புதிய நிர்வாகிகளால் கட்சி வலுப்பெறுவதாக கூறியுள்ளார்.
திருப்பூரில் தொழில் பாதிப்பு
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய பாஜக மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், வடமாநிலத்தவர் தொடர்பான பிரச்சினையில் முதல்வர் ஆரம்பத்திலேயே தடுத்து இருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது.வட மாநிலத் தொழிலாளர்கள் கோவை ,திருப்பூர் போன்ற பகுதிகளில் இருக்கின்றனர். இந்த பிரச்சினையால் ஜவுளி துறையில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது.இந்த பிரச்சனையை சரியாக கையாளததால் கோவை ,திருப்பூர் மாவட்டங்களில் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை மாநில அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு நடத்துவதை போல சந்தேகம் ஏற்படுகிறது என தெரிவித்தார்.
வெறுப்புணர்வை ஏற்படுத்தும் அமைச்சர்கள்
முதலமைச்சருக்கு ஆட்சிக்கு ஆபத்து என்ற உணர்வு ஏற்பட்டால் அதற்கு மூல காரணம் யார் ? இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது. அமைச்சர்கள் பானி பூரி குறித்தும், இந்தி பேசும் தொழிலாளர்கள் குறித்தும் விமர்சனங்கள் வைக்கின்றனர். சிலர் இதற்கு வலுவான கருத்துக்களை பரப்புகின்றனர். வெறுப்புணர்வு பிரச்சாரத்தை தூண்டுபவர்களை விட்டு விட்டு ,பிரச்சனை வந்த பின்னர் ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என்று சொன்னால் இதை உருவாக்கியது நீங்கள் தான். இதை சரி செய்ய வேண்டியதும் நீங்கள்தான். அடுத்தவர் மீது பழி போடும் முயற்சியை முதல்வர் செய்யக்கூடாது என கேட்டுக்கொண்டார்.
பாஜகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது
ஒவ்வொரு கட்சியிலிருந்து மாற்றுக் கட்சிக்கு செல்வதும், மாற்றுக் கட்சியில் இருந்து இங்கு வருவதும் வழக்கம். பா.ஜ.க ஐ.டி விங் நிர்வாகிகள் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு வெளியே போய் இருக்கின்றனர். அவருக்கு சில அரசியல் காரணம் இருக்கலாம். வெளியில் செல்லும் பொழுது அவர்களின் கருத்துக்களை சொல்வார்கள்.இந்த விவகாரத்தை பொருத்தவரை, பாஜகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பாஜக புதிய நபர்களால் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.ஒரு சில நபர்களின் விலகலால் எந்த பாதிப்பும் இல்லை.
தேசிய அரசியலுக்கு போகும் பொழுது பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டும். தேசிய தலைவர்களுடன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்று கொள்ள வேண்டும். தேசியத்தின் மீது நம்பிக்கை இருக்கின்றதா முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என கேள்வி எழுப்பினார். திமுக அமைச்சர்கள் ஓட்டு போட்டவர்களை இழிவாக பேசுகின்றனர். இவர்கள் எஜமானர்கள் போலவும் ,ஓட்டு போட்டவர்களை அடிமைகள் போலவும் நடத்துகின்றனர் இவர்கள் சுயமரியாதை பேசுகின்றனர் என வானதி சீனிவாசன் விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்